வேறு மதப்பெண்ணுடன் காதல்: வாலிபரை ஆணவக்கொலை செய்த அண்ணன்!
விஜய் காம்பிளி.

வேறு மதப்பெண்ணுடன் காதல்: வாலிபரை ஆணவக்கொலை செய்த அண்ணன்!

மதம் மாறி காதலித்த வாலிபரை பெண்ணின் சகோதரர் உள்ளிட்டோர் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டம், பீமாநகரைச் சேர்ந்தவர் விஜய் காம்பிளி(25). பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவரும், அதே பகுதியைச் சேர்ந்த வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்தனர். இதற்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் பீமா நகர் பகுதியில் உள்ள ரயில் நிலையம் அருகே காம்பிளி சென்ற போது அவர் காதலிக்கும் பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தார் தடுத்து நிறுத்தியுள்ளனர். தங்கள் வீட்டுப் பெண்ணைக் காதலிப்பதை விட்டு விட வேண்டும் என்று காம்பிளியுடம் கூறியுள்ளனர்.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பானது. அப்போது காம்பிளியை கத்தி, இரும்பு கம்பி கொண்டு குத்தினர். இதில் சம்பவ இடத்திலே அவர் பலியானார். தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு வந்து காம்பிளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இக்கொலை தொடர்பாக பெண்ணின் சகோதரர் ஷஹபிதுல்லா(19) மற்றும் நவாஸ்(19) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும் சிலரைத் தேடி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் இதே போல மதம் மாறி காதலித்து திருமணம் செய்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நாகராஜ் என்ற வாலிபர் மணப்பெண்ணின் குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்டார். அதே போல ஆணவக்கொலை சம்பவம் மீண்டும் கர்நாடகாவில் நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in