அதிர்ச்சி; காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை: துக்கம் தாளாமல் தாயும் தற்கொலை!

தற்கொலை
தற்கொலை

காதல் தோல்வியால் மகன் தற்கொலை செய்த துக்கம் தாங்காமல் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமுல்லைவாயில் சாந்திபுரம் 4வது தெருவைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி( 47). இவர் அம்பத்தூரில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கணவர் ரமேஷீடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனது மகன் லோகேஷ்( 27) என்பவருடன் பரமேஸ்வரி தனியாக வசித்து வந்துள்ளார்.

அவரது மகன் லோகேஷ் ஆவடியில் உள்ள எச்விஎஃப் தொழிற்சாலையில் ஸ்டோர் கீப்பராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை பரமேஸ்வரி வழக்கம்போல் வேலைக்குச் சென்ற நிலையை அவரது மகன் லோகேஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.

காதல் தோல்வி
காதல் தோல்வி

இரவு பரமேஸ்வரி வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகன் லோகேஷ் தூக்கில் பிணமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பரமேஸ்வரி அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனே திருமுல்லைவாயில் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.. இதற்கிடையே பரமேஸ்வரியும் மகன் இறந்த தூக்கம் தாளாமல் அறைக்குள் சென்று கதவைப் பூட்டி தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து அங்கு வந்த திருமுல்லைவாயில் போலீஸார் லோகேஷ் உடலைக் கைப்பற்றி கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பரமேஸ்வரியை தேடிப் பார்த்த போது அவரும் ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த திருமுல்லைவாயில் போலீஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் லோகேஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், காதல் தோல்வியால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மகன் இறந்த துக்கம் தாங்காமல் பரமேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. இருப்பினும் போலீஸார் தாய்,மகன் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in