அதிர்ச்சி... கர்ப்பிணி மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்ற கணவன்!

நந்தினி, ராஜ்குமார்
நந்தினி, ராஜ்குமார்

குடிப்பதை கண்டித்த கர்ப்பிணி  மனைவியை கணவன் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ள  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (28). பெயின்டர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளான்.  தற்போது நந்தினி நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில், ராஜ்குமார் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்துள்ளார். இதனால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினமும் பகலிலேயே குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார் ராஜ்குமார். மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது நீ குடித்துவிட்டு வந்தால் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என கணவரை நந்தினி மிரட்டியுள்ளார்.

முழு போதையில் இருந்த ராஜ்குமார்,  நீ என்ன தற்கொலை செய்து கொள்வது?  நானே உன்னை எரித்து விடுகிறேன் என்று சொல்லி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை  எடுத்து நந்தினியின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

நந்தினி மீது தீப்பற்றி எரியத் தொடங்கிய நிலையில் அங்கிருந்து மகனை தூக்கிக் கொண்டு ராஜ்குமார் வெளியில்  சென்றுள்ளார். நந்தினியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு  செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், நந்தினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக மறைமலை நகர்  போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை  கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  காதலித்து கைப்பிடித்த கர்ப்பிணி மனைவியை  தீ வைத்து எரித்த கணவரின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in