`குறைந்து விலைக்கு தங்கம் தருகிறோம் வாங்க'- நம்பிச் சென்ற நகைக்கடை ஓனருக்கு பெண் கும்பலால் நடந்த சோகம்

`குறைந்து விலைக்கு தங்கம் தருகிறோம் வாங்க'- நம்பிச் சென்ற நகைக்கடை ஓனருக்கு பெண் கும்பலால் நடந்த சோகம்

குறைந்த விலைக்கு தங்கம் கிடைக்கிறது என்று நம்பி சென்ற நகைக்கடைக் காரரை ஏமாற்றி மோசடி செய்ததாக வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளது காவல்துறை.

கள்ளக்குறிச்சி கடைவீதியில் நகைக்கடை நடத்தி வருபவர் முருகன். கடந்த சில நாட்களுக்கு முன் இவரை அணுகிய சிலர், தங்களிடம் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் இருப்பதாகவும், அதனை குறைந்த விலைக்கு தருவதாகவும் சொல்லியிருக்கின்றனர். அப்போது முருகன் அவர்களைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் அதற்குப் பிறகு அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர்கள் மிக நம்பிக்கையாக பேசியுள்ளனர்.

அதனையடுத்து அவர்களிடம் முதலில் கொஞ்சம் நகை வாங்கலாம் என்று முடிவு செய்த முருகன், கள்ளக்குறிச்சியில் இருந்து ரூ.96 லட்சத்தை எடுத்துக் கொண்டு தனியாக காரில் நாகை மாவட்டத்துக்கு வந்துள்ளார். தங்கம் விற்பதாக கூறியவர்கள் அளித்த தகவலின்பேரில் வேதாரண்யம் அருகேயுள்ள கருப்பம்புலத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அவரை சந்தித்த ஒரு பெண் உள்பட 7 பேர் அவரிடம், தங்களிடம் நிறைய தங்கம் இருப்பதாகவும் பணத்தை கொடுத்தால் தங்கத்தை தருவதாகவும் கூறி இருக்கின்றனர். இதை நம்பிய முருகன் தன்னிடம் இருந்த ரூ.96 லட்சம் பணத்தை அவர்களிடம் கொடுத்து இருக்கிறார். பணத்தை வாங்கி கொண்ட அவர்கள் அதற்குரிய தங்கத்தை கொடுக்காமல், சிறிதளவு தங்கத்தை மட்டும் கொடுத்திருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் அவர்களிடம் ரூ.96 லட்சத்துக்கு உரிய நகைகளை கொடுங்கள், இல்லாவிட்டால் பணத்தை திருப்பி கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அவர்கள் முருகனை தாக்கி அவர் அணிந்திருந்த நகைகளையும் பறித்துக் கொண்டு அடித்து விரட்டியுள்ளனர். இதையடுத்து முருகன் நடந்த சம்பவம் பற்றி வேதாரண்யம் போலீஸில் உடனடியாக புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கருப்பம்புலம் பகுதியை சேர்ந்த பண்டரிநாதன், விக்னேஷ், முருகையன், தனுஷ்கோடி, வெள்ளதுரை, மணிமாறன் மற்றும் துர்க்காதேவி ஆகிய 7 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதனையடுத்து அவர்களைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் 7 பேரும் முருகனிடம் ரூ.96 லட்சம் மோசடி செய்ததோடு அவரை தாக்கி நகைகளையும் பறித்தது தெரியவந்தது.

மேலும் அவர்கள் முருகனிடம் கூறியதுபோல உண்மையில் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்து விற்கிறார்களா? இல்லை போலி நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுபடுகின்றனரா? இது போல் மேலும் சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கிறார்களா? இதில் வேறு நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா? என்று தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள் போலீஸார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in