தனியார் மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பிய விவகாரம்; இணைப் பேராசிரியர் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை!

தனியார் மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பிய விவகாரம்; இணைப் பேராசிரியர் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை!
தி இந்து

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளை மூளைச்சலவை செய்து, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பியதாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு பெண் இணைப் பேராசிரியர் ஒருவர் மூளையாகச் செயல்பட்டது தெரியவந்ததை அடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க மாநில சுகாதாரத் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தில் புற்று நோய்க்கான சிறப்புச் சிகிச்சை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வழங்கப்படுகிறது. கடந்த சில ஆண்டாக சிகிச்சைக்கு வரும் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், ரூ.20 கோடியில் பாலரெங்கபுரத்தில் அதிநவீன கதிரியக்க இயந்திரங்கள் மற்றும் நவீன மருத்துவ கட்டமைப்புகளுடன் கூடிய மண்டல புற்றுநோய் மையம் கட்டப்பட்டது.

ஆனால், தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான இத்தனை வசதிகளும், நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களும் இருந்தும், இங்கு வரும் நோயாளிகளை இங்கு பணியில் இருந்த சிலர் மூளைச்சலவை செய்து, மதுரையில் உள்ள ஒரு தனியார் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி விசாரணை நடத்திய டீன் ரெத்தினவேலு, முதல்வர் காப்பீடு திட்ட வார்டு மேலாளர் சார்லஸ், டெக்னீசியன் அருணா ஆகியோரை கடந்த 9-ம் தேதி பணிநீக்கம் செய்தார்.

இந்த விவகாரத்தில் நோயாளிகளை மூளைச்சலவை செய்து அனுப்பிய ஒப்பந்தப் பணியாளர்களுக்கு மூளையாகச் செயல்பட்ட கதிரியக்கத் துறை பெண் மருத்துவர் ஒருவர், மருத்துவமனைக்குள்ளேயே வேறு துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், நோயாளிகளை மூளைச் சலவை செய்து அனுப்பிவைத்த அந்தத் தனியார் மருத்துவமனை, அந்தப் பெண் மருத்துவருக்கு சொந்தமானது என்றும் கூறப்படுகிறது.

இவர்கள் மட்டுமல்லாது இன்னும் பல ஒப்பந்த ஊழியர்களும் இதுபோல் பல மருத்துவமனைகளுடன் நெட்வொர்க் அமைத்து, அனைத்து சிகிச்சைப் பிரிவுக்கு வரும் நோயாளிகளையும் மூளைச்சலவை செய்து, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மதுரையைச் சேர்ந்த சமூக சேவகர் ஆனந்த், “குறிப்பாக, புற்றுநோயாளிகள்தான் மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். இவர்கள் மருத்துவக் காப்பீட்டு அட்டை மூலம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை பயன்படுத்திக் கொள்ள அனுமதி உள்ளது. இதைப் பயன்படுத்தி புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் தனியார் டெக்னீஷியன்கள், தரமான சுகாதாரமான மருத்துவம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி, நோயாளிகளை அந்தக் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கும் இடைத்தரகர்களாகச் செயல்படுகின்றனர்.

இப்படி அந்த மருத்துவமனைக்கு அனுப்பப்படும் நோயாளிகளிடம் மருத்துவக் காப்பீட்டு நிதி போக மருந்துகள், படுக்கை கட்டணம் என்று கூடுதலாக ரூ.40 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இதில் இடைத் தரகர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை கமிஷனாக கிடைக்கிறது. இவ்வாறு நோயாளிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்புவதால், அரசு மருத்துவமனைகளுக்கு கிடைக்கவேண்டிய மருத்துவக் காப்பீட்டு மேம்பாட்டு நிதி கிடைக்காமல் போய்விடுகிறது. இந்த விவகாரம் மருத்துவக் காப்பீடு நிதி இழப்பு முறைகேடு என்பதால், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in