
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 5 வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது திமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக எம்.பி.ஜெகத்ரட்சகன் சட்ட விரோத வெளிநாட்டு முதலீடு புகாரில் அவரது ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத் துறை முடக்கியது. இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் ஐ.டி துறை மீண்டும் சோதனையை ஆரம்பித்தது.
ஜெகத்ரட்சகனின் வீடு, மருத்துவக் கல்லூரி என அவருக்குச் சொந்தமான பல்வேறு இடங்களிலும் வருமானவரித்துறை அதிரடி சோதனையை ஆரம்பித்தனர். 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் ஐந்தாவது நாளாக இன்றும் சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது. பல இடங்களில் சோதனை ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், இன்னும் சில இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை அடையாற்றில் உள்ள அவரது வீடு, தி. நகரில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.
மேலும், பாரத் பல்கலைக்கழகம், பாலஜி மருத்துவக் கல்லூரி, சவீதா கல்வி குழுமம் ஆகியவற்றிலும் சோதனை தொடர்ந்து நடக்கிறது.
இந்த சோதனையில் என்னவெல்லாம் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறித்த வருமானவரித்துறை இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும்,பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ஜெகத்ரட்சகனின் வீட்டில் இருந்து 2 பைகள் கைப்பற்றப்பட்டதாகவும் அந்த கருப்பு நிற பைகளில் பல கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
5-வது நாளாக தேடியும் ஒன்றும் கிடைக்கவில்லை என திமுகவின் ஒரு தரப்பினர் சொல்லிக் கொண்டாலும், மற்றொரு தரப்போ ஜெகத்ரட்சகன் அண்ணன் வசமாக மாட்டிக் கொண்டார் என வருத்தத்தில் உள்ளனர்.