‘எனக்கு 1.30 கோடி வரதட்சணை போதாது.. மால் வேண்டும்’: மனைவி, குழந்தைக்கு கணவனால் நடந்த துயரம்!

‘எனக்கு 1.30 கோடி வரதட்சணை போதாது.. மால் வேண்டும்’: மனைவி, குழந்தைக்கு கணவனால் நடந்த துயரம்!

1. 30 கோடி ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசைப் பொருட்கள் போதாது என்று வணிக வளாகம் வரதட்சணையாக கேட்டு மனைவி, மகளை வீட்டிற்குள் சுவர் கட்டி சிறை வைத்த கணவனை போலீஸார் கைது செய்தனர்.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் புல்லாரெட்டி ஸ்வீட்ஸ் என்ற பெயரில் இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் மிட்டாய் கடைகளை நடத்தி வருபவர் ராகவாரெட்டி. இவரது மகன் ஏக்நாத் ரெட்டி. இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபர் மகள் பிரகன்யாவுக்கும் 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது மாப்பிள்ளைக்கு 75 லட்சம் ரூபாய் ரொக்க பணம், 19.5 லட்ச ரூபாய் மதிப்பில் தங்க, வெள்ளி நகைகள், 35 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ், நாத்தனார் சீதனம் என்ற பெயரில் தனியாக வரதட்சணை வழங்கப்பட்டுள்ளது. ஏக்நாத் ரெட்டிக்கு வரதட்சணையாக 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசைப் பொருட்களை பேரம் பேசி அவரது தந்தை ராகவாரெட்டி, அவரது தாய் பார்வதி, சகோதரி ஸ்ரீவித்யா ஆகியோர் பெற்றுள்ளதாக தெரிகிறது. இவை போதாதென்று ஹைதராபாத்தில் வணிக வளாகம் ஒன்றை கூடுதல் வரதட்சணையாகக் கேட்டுள்ளனர்.

ஆனால், பிரகன்யாவின் பெற்றோரால் வணிக வளாகம் கட்டித்தர முடியவில்லை. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு 7 வயதில் மகள் உள்ளார்.

இந்த நிலையில் தனது மனைவியை விவாகரத்து செய்ய ஏக்நாத்ரெட்டி முயன்றுள்ளார். 2021-ம் ஆண்டு அவரது விவாகரத்து வழக்கு தள்ளுபடியானது. இதன் காரணமாக மனைவியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி தனது மனைவி மற்றும் மகள் தங்கி இருந்த அறையின் மின்சாரத்தையும், தண்ணீர் இணைப்பையும் ஏக்நாத் ரெட்டி துண்டித்துள்ளார். ஆனால், தனது மகளுடன் அநத் வீட்டிலேயே பிரகன்யா வசித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஏக்நாத் ரெட்டி, தனது மனைவி, மகள் அறையில் இருந்து வெளியேற முடியாத வகையில் தடுப்புச்சுவர் அமைத்து சிறை வைத்துள்ளார். அத்துடன் அவர்களுக்கு உணவு கொடுக்கக்கூடாது என்று பணியாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். வீட்டில் தனது மகளுடன் சிறை வைக்கப்பட்ட விவகாரத்தை, பிரகன்யா தனது பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஏக்நாத் ரெட்டி வீட்டிற்குச் சென்ற பஞ்சகுட்டா போலீஸார், தடுப்புச் சுவரை உடைத்து பிரகன்யாவையும், அவரது மகளையும் மீட்டனர். காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஏக்நாத் ரெட்டிக்கு ரத்தப்புற்றுநோய் உள்ளதை மறைத்து தனக்குத் திருமணம் செய்து வைத்துள்ளதாகவும், வரதட்சணைக் கேட்டு தொடர்ந்து சித்ரவதை செய்தார்கள் என்றும் பிரகன்யா தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து குடும்ப வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், ஏக்நாத் ரெட்டியை கைது செய்தனர். அத்துடன் ராகவாரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். தனது மனைவி, மகளை வீட்டிற்குள் சுவர் வைத்து கணவனே சிறை வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in