சேவல் தலையுடன் சிக்கிய மாந்திரீக மண்டை ஓடு

சேவல் தலையுடன் சிக்கிய மாந்திரீக மண்டை ஓடு

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம் சாத்தங்குடி ஊராட்சியைச் சேர்ந்தது புல்லமுத்தூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள், அந்த ஊர் பொது மயானத்தில் நடைபெற்றது.

இதற்காக இறந்தவர் உடலை எரியூட்டும் இடத்தை மயான தொழிலாளி சுத்தம் செய்தபோது, அங்கே சந்தேகப்படும்படியாக சாக்குப்பை ஒன்று கிடந்தது. அதைத் திறந்து பார்த்தபோது சாக்குப்பையின் உள்ளே மனித மண்டை ஓடும், சில பூஜைப் பொருட்களும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக கிராம மக்களுக்குத் தகவல் கொடுத்தார்.

கிராமத்து இளைஞர்களில் துணிச்சலான சிலர் அந்தச் சாக்குப்பையை ஆய்வு செய்தபோது, அதில் மண்டை ஓடு, சேவல் தலை, மாவு போன்ற பொருள், விபூதி போன்றவை இருப்பதைக் கண்டனர். உடனே இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீஸில் புகார் செய்யப்பட்டது.

போலீஸார் விரைந்து வந்து சாக்குப்பையை கைப்பற்றி தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் ஆய்வு செய்தனர். புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்திய போலீஸார், அதை அந்த மயானத்திலேயே புதைத்தனர். சுற்றுவட்டார கிராமங்களில் மயானங்களில் சந்தேகப்படும்படியாக யாரும் நடமாடுகிறார்களா? யாரேனும் மாந்திரீகம் செய்வதாகப் பணம் பறிக்கிறார்களா என்றும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in