
சென்னையில் இறந்து பிறந்த குழந்தையை அடக்கம் செய்ய பணம் இல்லாததால், பைக்குள் வைத்து கூவம் ஆற்றில் வீசிய தந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (29). அவரது மனைவி சுகன்யா (27). இவர்களுக்கு ஏழு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்த சுகன்யா எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தையை சந்தோஷ்குமாரிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர். அதை எடுத்துச் சென்று முறைப்படி அடக்கம் செய்ய வேண்டிய சந்தோஷ் குமார், குழந்தையை ஒரு பையில் வைத்து எடுத்துக் கொண்டு சென்றார். அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திய அவர் எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள கூவம் ஆற்றின் பாலத்தில் நின்றுக் கொண்டு, குழந்தை வைத்திருந்த பையை ஆற்றுக்குள் வீசினார்.
இதைப்பார்த்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீஸார் சந்தோஷ் குமாரிடம் விசாரணை செய்த போது சடலத்தை அடக்கம் செய்ய தன்னிடம் பணம் இல்லாததால் குழந்தையின் சடலத்தை ஆற்றுக்குள் வீசியதை ஒப்புக்கொண்டார். அதையடுத்து தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு ஆற்றுக்குள் வீசப்பட்ட குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.