`சொத்துகளை எனக்கு பிரித்துக் கொடு'- தம்பியை சுட்டுக் கொன்ற முன்னாள் ராணுவவீரர்

`சொத்துகளை எனக்கு பிரித்துக் கொடு'- தம்பியை சுட்டுக் கொன்ற முன்னாள் ராணுவவீரர்

திருவண்ணாமலைப் பகுதியில் பாகப்பிரிவினை கேட்ட தம்பியை முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து முன்னாள் ராணுவவீரர் ஜெகதீசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெகதீசன்
ஜெகதீசன்

திருவண்ணாமலை மாவட்டம், கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன். முன்னாள் ராணுவ வீரரான இவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவத்திலிருந்து வெளியே வந்திருக்கிறார். தனது பாதுகாப்பிற்காக உரிமத்துடன் கூடிய கை துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்தார். இவருடன் மனைவி சிவகாமி, மகள், மகன் ஆகியோர் வாழ்ந்து வருகிறார்கள். ஜெகதீசனின் தம்பி கோதண்டராமனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர்களுக்குச் சொந்தமாக கரிப்பூர் கிராமத்தில் 7 ஏக்கர் நிலமும் அந்த நிலத்திலேயே வீடும் அமைந்துள்ளது. அண்ணன், தம்பி இருவருமே அந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள்.

கோதண்டராமனுக்குத் திருமணம் செய்ய குடும்பத்தில் உள்ளவர்கள் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் பாகப்பிரிவினை செய்து தருமாறு அண்ணனிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் கோதண்டராமன். இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இவர்களின் தந்தை தேசிங்கு இருவரையும் சமாதானப்படுத்தி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அண்ணன், தம்பிகளுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஜெகதீசன், தன்னுடைய கை துப்பாக்கியால் தம்பி கோதண்டராமனைச் சுட்டிருக்கிறார். குண்டு பாய்ந்த நிலையில் கோதண்டராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோதண்டராமன்
கோதண்டராமன்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வந்த திருவண்ணாமலை எஸ்.பி குமார், தாசில்தார் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் அங்கு விசாரணை நடத்தினர். கோதண்டராமன் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்குக் கொண்டு செல்ல திட்டமிட்டனர். இதையடுத்து கோதண்டராமன் உடலை காவல்துறையிடம் கொடுக்க மறுத்து அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கோதண்டராமனின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் முன்னாள் ராணுவ வீரர் ஜெகதீசன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பாகப்பிரிவினை காரணமாக நடைபெற்ற துப்பாக்கிச் சூடு திருவண்ணாமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in