பெண் எஸ்.ஐக்கு கத்திக்குத்து: அலைபேசியில் நலம் விசாரித்த முதல்வர்

பெண் எஸ்.ஐக்கு கத்திக்குத்து: அலைபேசியில் நலம் விசாரித்த முதல்வர்

திருநெல்வேலி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியின்போது கத்திக்குத்துப்பட்ட பெண் எஸ்.ஐ மார்க்ரெட் தெரசாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அலைபேசியில் அழைத்து நலம்விசாரித்தார். கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருநெல்வேலி மாவட்டம், பழவூர் பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் திருவிழா நடந்துவருகிறது. சுத்தமல்லி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிசெய்யும் மார்க்ரெட் தெரசா என்பவர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆறுமுகம் என்பவர் எஸ்.ஐ மார்க்ரெட் தெரசாவை கத்தியால் சரமாரியாக கன்னம், வலது மார்பு, கழுத்துப் பகுதியில் குத்தினார். சில மாதங்களுக்கு முன்பு மார்க்ரெட் தெரசா வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது மதுபோதையில் வந்த ஆறுமுகத்துக்கு, குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக அபராதம் விதித்தார் தணிக்கையில் ஈடுபட்ட மார்க்ரெட் தெரசா. இந்த கோபத்தில் தான் ஆறுமுகம் எஸ்.ஐ மார்க்ரெட் தெரசாவை சரமாரியாகக் குத்தியுள்ளார்.

உடனே பாதுகாப்புப் பணியில் இருந்த சக காவலர்கள் மார்க்ரெட் தெரசாவை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்துத் தகவல் கிடைத்ததும், முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவ சிகிச்சையில் இருக்கும் மார்க்ரெட் தெரசாவை அலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஆறுமுகத்தையும் போலீஸார் கைது செய்தனர். மார்க்ரெட் தெரசாவின் உடல்நிலை குறித்து விசாரித்ததை முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.