பாதயாத்திரை குழுவுக்குள் புகுந்த கார்: தந்தை, மகன், உறவினருக்கு நடந்த சோகம்

பாதயாத்திரை குழுவுக்குள் புகுந்த கார்: தந்தை, மகன், உறவினருக்கு நடந்த சோகம்
பிடிபட்ட கார்

பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற குழு மீது மோதி மூவர் உயிரைப் பறித்த கார் பிடிபட்டுள்ளது.

தஞ்சாவூர் மேலவஸ்தசாவடியை சேர்ந்தவர் சாமிநாதன் (47). இவர் தனது மகன்கள் தவப்பிரியன் (15), கமலேஷ் (12), உறவினர் சேகரன் (42) ஆகியோருடன் சாமி தரிசனத்துக்காக பழனிக்கு காரில் வந்தார். வழியில் உள்ள ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர்கள், பின்னர் அங்கேயே காரை நிறுத்திவிட்டு பாதயாத்திரையாக பழனி நோக்கிச் சென்றனர்.

திண்டுக்கல்-பழனி சாலையில் சத்திரப்பட்டி பெரியபாலம் அருகே நடந்துசென்றபோது, பழனி நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று அந்த கூட்டத்துக்குள் புகுந்து நிற்காமல் பறந்தது. இந்த விபத்தில் சாமிநாதன், அவருடைய மகன்கள் தவப்பிரியன், கமலேஷ், உறவினர் சேகரன் ஆகியோர் படுகாயமடைந்தனர். சத்திரப்பட்டி போலீஸார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் சாமிநாதன், அவரது மகன் கமலேஷ், உறவினர் சேகரன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். தவப்பிரியன், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து சத்திரப்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து, நேற்றிரவு விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை தனிப்படை போலீஸார் தேடிவந்தனர். இந்த நிலையில் இன்று காலை பழனி அருகே உள்ள ஆயக்குடி பகுதியில் ஒரு கார் முகப்பு சேதமடைந்து, முன் கண்ணாடி உடைந்த நிலையில் அனாதையாக நின்றது. அதுதான் விபத்தை ஏற்படுத்திய கார் என்பதை போலீஸார் உறுதி செய்தனர். காரின் முன்புறம் பிரஸ் என்றும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. காரின் நம்பரை கொண்டு அதன் உரிமையாளர் யார்? என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

Related Stories

No stories found.