பெற்றோரை மீறி காதல் திருமணம்… புதுமணத் தம்பதிகளை விருந்துக்கு அழைத்த அண்ணன்: ஐந்தே நாளில் நடந்த கொடூரம்!

பெற்றோரை மீறி காதல் திருமணம்… புதுமணத் தம்பதிகளை விருந்துக்கு  அழைத்த அண்ணன்: ஐந்தே நாளில் நடந்த கொடூரம்!

திருமணமாகி ஐந்து நாட்களே ஆன புதுமணத் தம்பதியை விருந்துக்கு வரவழைத்த பெண்ணின் சகோதரர் இருவரையும் வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி அய்யாகோயில் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சரண்யா(24). இவர் நர்சிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். அவரை அவரது அண்ணன் சக்திவேலின் உறவினருக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தனர்.

ஆனால் அதில் சரண்யாவுக்கு விருப்பமில்லை என்று சொல்லப்படுகிறது. அவர் திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூரைச் சேர்ந்த வடிவேல் மகன் மோகன்(31) என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் இவர்களது காதலைப் பெண்ணின் வீட்டார் ஏற்க மறுத்துள்ளனர்.

அதனால் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு இருவரும் தங்கள் பெற்றோருக்கு தெரியாமல் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து தகவலை சரண்யா தனது பெற்றோருக்கு தெரிவித்திருக்கிறார். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் சரண்யாவின் அண்ணன் சக்திவேல், மணமக்களுக்கு விருந்து வைக்க வேண்டும் எனக்கூறி சென்னையில் இருந்த இருவரையும் பேசி வரவழைத்துள்ளார். இதை நம்பி இருவரும் இன்று சென்னையிலிருந்து கிளம்பி சோழபுரம் துலுக்கவேலிக்கு வந்தனர். மாலை மூன்று மணியளவில் வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கின்றனர்.

அண்ணன் தங்களை அன்போடு வரவேற்பார் என்று ஆசையோடு வீட்டுக்குள் நுழைந்தார்கள். ஆனால் அங்கு அரிவாளோடு காத்திருந்தார் அண்ணன் சக்திவேல். அவருக்கு துணையாக அவரது மைத்துனர் தேவனாஞ்சேரியைச் சேர்ந்த ரஞ்சித் கூட்டு சேர்ந்திருந்தார். இருவரும் சேர்ந்து வீட்டு வாசலில் வந்து நின்ற புதுமணத் தம்பதியை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதை சற்றும் எதிர்பாராத இருவரும் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
இதைப் பார்த்த பொதுமக்கள் சோழபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து சோழபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரது உடலையும் கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து சோழபுரம் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து தலைமறைவான சக்திவேல் மற்றும் ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.

காதலித்தவரின் கரம் பிடித்து ஆசையோடு ஆயுள் முழுக்க ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்ற எதிர்பார்த்திருந்த காதல் தம்பதியின் வாழ்வை இப்படி துவங்கிய வேகத்திலேயே முடித்து வைத்த அண்ணன்காரனின் கொடூர செயல் அப்பகுதி பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in