
பெரம்பலூரில் லாரி பழுதாகி நின்ற நிலையில், மெக்கானிக்காக காத்திருந்த ஓட்டுநர் மீது மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதே இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், குண்டலபட்டி அருகே கே, என், கொட்டகை பகுதியை சேர்ந்தவர் குப்பன் மகன் முனியப்பன் (56). இவர் கிருஷ்ணகிரியில் இருந்து இரும்பு வேலி அமைக்க கருங்கல் ஏற்றிக்கொண்டு காட்டுமன்னார்கோவில் நோக்கி சென்றார். வேப்பூர் அடுத்த ஏ.சித்தூர் அருகில் சென்றபோது லாரி பழுதாகி நின்றது.
இதையடுத்து லாரியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய மெக்கானிக்கிற்கு தகவல் கொடுத்துவிட்டு லாரியிலேயே ஓட்டுநர் முனியப்பன் காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக பெரம்பலூரில் இருந்து எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நோக்கி வந்த மற்றொரு லாரி எதிர்பாராதவிதமாக பழுதாகி நின்ற லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் லாரியில் காத்திருந்த முனியப்பன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விபத்து தொடர்பாக எம். சாண்ட் ஏற்றி வந்த லாரி டிரைவர் மீது வேப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.