'காதல்' பட பாணியில் காதல்: மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன் கைது

'காதல்' பட பாணியில் காதல்: மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன் கைது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் காயத்ரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 17 வயதாகும் இவர் அந்தப் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்துவருகிறார். இவர் கல்லூரிக்குச் செல்லும் வழியில் உள்ள இரும்புக்கடை ஒன்றில் வேலை பார்த்த அதே வயதுள்ள சிறுவனுடன் இவருக்கு காதல் மலர்ந்தது. பெரிய இடத்துப் பொண்ணும், ஏழை வீட்டுப் பையனும் காதல் பட பாணியில் காதலித்துள்ளார்கள். இதற்கு ஆன்லைன் கிளாஸ் என்ற பெயரில் செல்போனும் உதவியிருக்கிறது.

இந்த விவகாரம் வீட்டிற்குத் தெரிந்ததும் மாணவியின் பெற்றோர் அவரைக் கண்டித்தனர். அவர் மீதான கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 10ம் தேதி திடீரென மாணவி மாயானார். இதுகுறித்து அவளது பெற்றோர் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்நிலையத்தில் புகார்செய்தனர்.

இதைத் தொடர்ந்து அந்த இரும்புக்கடை சிறுவனின் பெற்றோரை அழைத்து போலீஸார் கடுமையாக எச்சரித்தனர். எனவே, அவர்கள் தங்கள் மகனையும், அந்தப் பெண்ணையும் தேடினார்கள். நாகை மாவட்டம் பூம்புகாரில் உள்ள பையனினன் வீட்டில் அவர்கள் இருப்பதை அறிந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்துக்கு அவனின் பெற்றோர் அழைத்துவந்தனர். போலீஸார் அறிவுரை கூறி, அந்த மாணவியை அவளது பெற்றோருடன் அனுப்பிவைத்தார்கள்.

அந்தச் சிறுமியின் தாய் அவளைத் தனியாக அழைத்து விசாரித்தபோது, அவர்களுக்குள் எல்லாம் முடிந்துவிட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மைனர் பெண்ணான தன் மகளை ஆசை வார்த்தை கூறி அந்தச் சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக போலீஸில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிந்து அந்தப் பையனை போலீஸார் கைது செய்துள்ளனர். காதல் பட பாணியில் காதலித்தவர்களுக்கு, கடைசியில் காதல் படம் போலவே அந்தச் சிறுவன் மட்டுமே பாதிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள் காவலர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in