
செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் பிறந்த ஆண் குழந்தை இறந்துள்ள சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி பவானி நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று முன் தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தெள்ளார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக பவானியை உறவினர்கள் அனுமதித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை வரை பிரசவ வலியால் துடித்த பவானிக்கு குழந்தை பிறக்கும் நேரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் அங்கு பணியில் இருந்த செவிலியர்களே பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது பவானிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் பிறந்த ஆண் குழந்தை அடுத்த ஒரு மணி நேரத்தில் அசைவு ஏதும் இல்லாமல் கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் செவிலியர்களிடம் முறையிட்டனர். அவர்கள் பரிசோதனை செய்த பார்த்தபிறகு குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோரும், உறவினர்களும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த திமுக ஒன்றிய செயலாளர் இளங்கோவன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். அதனையடுத்து குழந்தையின் உடலைப் பெற்றுக் கொண்டு அவர்கள் கலைந்து சென்றனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்து குழந்தை உயிரிழந்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை!
பகீர்... 81 கோடி இந்தியர்களின் ஆதார் தரவுகள் விற்பனை... சிபிஐ விசாரணை!
இன்றே கடைசி தேதி... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
மைதானத்தில் வீராங்கனைக்கு முத்தமிட்ட விவகாரம்... லூயிஸுக்கு 3 ஆண்டுகள் தடை!