‘என் மரணத்திற்குக் காரணம் தனியார் வங்கி தான்’: வாட்ஸ் அப்பில் தகவல் சொல்லி விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்த வியாபாரி!

தற்கொலை செய்துகொண்ட லட்சுமணன்
தற்கொலை செய்துகொண்ட லட்சுமணன்

கடன் தொல்லையால் ஜவுளி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் சாவதற்கு முன் அதற்குக் காரணம் தனியார் வங்கி தான் என வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள குண்டலபட்டியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (46). இவர் வீடு வீடாகச் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டுவதற்கு குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதாக தனியார் வங்கி அறிவித்திருந்தது. இதன் அடிப்படையில் அங்கு கடன் வாங்கி உள்ளார்.

கடன் வாங்கிய போது 82 பைசா வட்டி என்று கூறியதாகவும், பின்னர் கூடுதலாக வட்டி கேட்டதாகவும், இதன் காரணமாக லட்சுமணன் கடனாளி ஆனதாகவும் கூறப்படுகிறது. இதனால், அவருக்கும், அவரது மனைவி அழகேஸ்வரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் அழகேஸ்வரி கோபித்துக் கொண்டு தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் உள்ள தனது அக்கா வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

இதனால், வேதனை அடைந்த லட்சுமணன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது செல்போனில் பேசி அதைப்பதிவு செய்து வாட்ஸ் அப்பில் அனுப்பி விட்டு நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில், "என் மரணத்திற்குக் காரணம் தனியார் வங்கி தான். என்னை நம்பிய 5 நபர்களுக்கு கடன் வாங்கி தந்து அவர்களையும் தர்மசங்கடத்தில் தலைகுனிய வைக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். இந்த 5 பேரும் என்னை மன்னிக்க வேண்டும். அந்த வங்கி 6 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்து 80 பைசா வட்டி என்று கூறியது. ஆனால், தற்போது கூடுதலாக வட்டி வாங்கி வருகின்றனர். இருப்பினும், கடந்த 3 வருடங்களாக கரோனா காலத்தில் கூட சரியாகக் கட்டி வந்தேன். தற்போது, நூல் விலை மற்றும் ஜவுளி விலை கூடியதால் 10 பேர் வேலை செய்த இடத்தில் 2 பேர் மட்டுமே வேலை செய்யக்கூடிய அளவுக்கு தொழிலில் நஷ்டம் அடைந்துள்ளது. என் சாவுக்கு முழு காரணம் தனியார் வங்கியின் இடைத்தரகராக செயல்பட்ட ஒருவரும் (பெயரைக் குறிப்பிட்டார்), அந்த வங்கியும் தான் பொறுப்பு. எனது பக்கம் நியாயம் கிடைக்க எனது கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று உருக்கமாகப் பேசியுள்ளார். அந்த வீடியோவை வாட்ஸ்அப் மூலம் தனக்குத் தெரிந்தவர்களுக்கு லட்சுமணன் அனுப்பி உள்ளார்.

இதைப் பார்த்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக நிலக்கோட்டை காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். காவல் துணை ஆய்வாளர் பாலா, முத்தையா ஆகியோர் நேரில் சென்று உடலை உடற்கூறாய்விற்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நிலக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் குரு வெங்கட் ராஜ் உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு லட்சுமணன் உடல் பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்கொலை செய்துகொண்ட லட்சுமணன்-அழகேஸ்வரி தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in