பட்டப்பகலில் பகீர்... நடுரோட்டில் இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை!

கொலை
கொலை

தட்சிண கன்னடா மாவட்டத்தில் பட்டப்பகலில் இளம்பெண்ணை, வாலிபர் ஒருவர் நடுரோட்டில் கழுத்தை அறுத்துக் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள புத்தூரில் இன்று காலை 18 வயது இளம்பெண் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த வாலிபர், அந்த பெண்ணை வழிமறித்தார். அப்போது அவருடன் வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணின் கழுத்தை அறுத்தார்.

பரபரப்பான சாலையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வாலிபர் கத்தியால் அறுத்ததால் ரத்த வெள்ளத்தில் இளம்பெண் மயங்கி விழுந்தார். இதையடுத்து பைக்கில் வந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

கொலை
கொலை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளம்பெண்ணை புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதன் பின் மேல் சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து புத்தூர் போலீஸார் விசாரணை நடத்திய போது, கொலை செய்யப்பட்ட இளம்பெண் கௌரி(18) என்றும், அவரைக் குத்திக் கொலை செய்த வாலிபர் பத்மராஜ் என்பதும் தெரிய வந்தது.

இச்சம்பவம் குறித்த தட்சிண கன்னடா காவல் துறை கண்காணிப்பாளர் சிபி ரிஷ்யந்த் கூறுகையில்," பத்மராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எதற்காக கௌரியை கொலை செய்தார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

பட்டப்பகலில் நடுரோட்டில் இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in