20 சவரன் நகை, தங்கைகளின் 3 லட்சத்தை ரம்மி விளையாட்டில் இழந்த இளம்பெண் எடுத்த துயர முடிவு!

20 சவரன் நகை, தங்கைகளின் 3 லட்சத்தை ரம்மி விளையாட்டில் இழந்த இளம்பெண் எடுத்த துயர முடிவு!

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நகை, பணம் இழந்த விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலி புதுநகர் எம்எம்டிஏ காலனி பகுதியைச் சேர்ந்தவர் பவானி(29). இவர் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ்(32) என்பவரைக் காதலித்து கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மெக்காட்டிக்பேரஸ்(3), நோயல்கிறிஸ்(1) என 2 குழந்தைகள் உள்ளனர்.
தனியார் நிறுவனத்தில் பாக்கியராஜ் வேலை பார்த்து வருகிறார். கந்தன்சாவடியில் உள்ள தனியார் ஹெல்த் கேர் நிறுவனத்தில் பவானி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஓராண்டாக ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான பவானி பல லட்ச ரூபாய் பணத்தை இழந்துள்ளார். இந்த சம்பவம் கணவர் மற்றும் பவானி குடும்பத்தினருக்கு தெரியவர அவர்கள் பவானியைக் கண்டித்துள்ளனர்.

ஆனால், பவானி அவர்களது பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தனது 20 சவரன் நகையை விற்று அதில் வந்த பணத்தை வைத்து ஆன்லைன் ரம்மி சூதாட்டம் ஆடியுள்ளார். இதில் பணத்தை இழந்த பவானி விட்டதைப் பிடிக்க எண்ணி தனது இரு தங்கைகளிடம் தலா 1.5 லட்சம் வீதம் 3 லட்ச ரூபாய் கடன் வாங்கி ரம்மி விளையாட்டில் தோற்றுள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த பவானி என்ன செய்வது என்று தெரியாமல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது தங்கை பாரதியிடம் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்ததை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு குளித்து விட்டு வருவதாக சென்ற பவானி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பாக்கியராஜ் குளியல் அறை கதவைத் திறந்து பார்த்த போது பவானி தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே பவானியை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பவானி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸார், பவானி சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in