
ஆந்திராவில் தலைவிரி கோலமாக வந்த 8 மாணவிகளின் முடியை, வகுப்பு ஆசிரியையே வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் நகரில் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் முறையாக தலை சீவி, ஜடை பின்னல் போட்டு வர வேண்டும் என விதிமுறை உள்ளது. நேற்று காலை அரசு பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவிகள் 8 பேர் தலைமுடியை சீவி ஜடை பின்னல் போடாமல் தலைவிரி கோலமாக வகுப்புக்குள் நுழைந்துள்ளனர்.
அப்போது வகுப்புக்கு வந்த ஆசிரியை, மாணவிகளின் தலைவிரி கோலத்தைக் கண்டு ஆத்திரம் அடைந்தார். தலைமை ஆசிரியர் அறைக்கு சென்ற அந்த ஆசிரியை அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து வந்து, தலைவிரி கோலத்துடன் வந்த 8 மாணவிகளை வரிசையாக நிற்க வைத்து அவர்களது முடியை ஒட்ட வெட்டினார். இதனை கண்ட சக மாணவிகள் அவர்களை கிண்டல் கேலி செய்தனர்.
இதனால் அவமானம் அடைந்த மாணவிகள் வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் இதுகுறித்து தெரிவித்தனர். தங்களது மகள்களின் கோலத்தைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பள்ளிக்கு வந்த அவர்கள் மாணவிகளின் முடியை வெட்டிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து மாணவிகளின் முடியை வெட்டிய ஆசிரியை உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோர்களிடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பெற்றோர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.