விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளைக் கடலில் கரைக்கும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதால் அடுத்த 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’விநாயகர் சதுர்த்தி விழா கன்னியாகுமரி மாவட்டத்தில் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இந்த சிலைகள் கடலில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இதனை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் ஊர்வலம் நடை பெறும் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை நாளை செப். 22ம் தேதி முதல் 3 நாட்கள் செயல்படாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.