
ஈரோடு சத்தியமங்கலம் மலைப்பகுதியில் கரும்பு ஏற்றி வந்த லாரி ஒன்று, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தாளவாடி மலைக்கிராமம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கரும்பு சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது. அங்கு அறுவடை செய்யப்படும் கரும்புகள், லாரிகள் மூலம் திம்பம் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம், பண்ணாரி பகுதிகளில் இயங்கும் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றி வந்த லாரி, கோம்புபள்ளம் என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்புகளை வேகமாக கடந்துள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த கரும்புகள் முழுவதும் சாலையில் சிதறின.
அப்போது சாலையோரம் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த நபர் லாரி சரிவதைக்கண்டு, தப்பி ஓடினார். இருப்பினும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் சேதமடைந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. கரும்பு லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.