விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தன் மகள் குறித்த கவலையால் புதுச்சேரியில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது புதுச்சேரியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி, காவல்துறையில் சிம்கா செக்யூரிட்டி பிரிவில் உதவி சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பிரசாந்த் குமார் (50). இவர் புதுச்சேரி மேரி உழவர் கரைப்பகுதியில் வசித்து வந்தார். இவரது மகளுக்கு சமீபத்தில் விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் மனவேதனை அடைந்த பிரசாந்த்குமார் நேற்று முன் தினம் இரவு மனைவியின் சேலையில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் பிரசாத்குமார் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி அறையைத் திறந்து பார்த்தபோது பிரசாத்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாகத் தொங்கினார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், பிரசாத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.