ஆசிரியரைத் தாக்கி வீடியோ எடுத்த மாணவர்கள்: அதிரடி காட்டிய அதிகாரிகள்!

ஆசிரியரைத் தாக்கி வீடியோ எடுத்த மாணவர்கள்: அதிரடி காட்டிய அதிகாரிகள்!

வகுப்பறையில் ஆசிரியரைத் தாக்க முயன்றதுடன் ஆபாச அர்ச்சனை செய்து அதை வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பிய மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 12-ம் வகுப்பு பள்ளியில் தாவரவியல் ஆசிரியராக பணியாற்றுபவர் சஞ்சய்காந்தி. இவர் வகுப்பறையில் மாணவர்களிடம் திருப்புதல் தேர்வுக்கான செய்முறை நோட்டுக்களைச் சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளார். ஆனால், சில மாணவர்கள் இதை சமர்ப்பிக்கவில்லை.

இதனால் நோட்டு சமர்ப்பிக்காத மாணவர்களை ஆசிரியர் கண்டித்துள்ளார். அப்போது சில மாணவர்கள் , ஆசிரியரை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர் சஞ்சய்காந்தி தலைமை ஆசிரியர் வேலனிடம் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் மாணவர்களிடம் வேலன் விசாரணை நடத்தினார். இந்நிலையில் ஆசிரியரை தாக்க முயற்சி செய்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. வகுப்பறையில் இருந்த மாணவர்கள் சிலர், இந்த காட்சியை எடுத்து பரப்பியுள்ளனர்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவின்பேரில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி சம்பந்தப்பட்ட பள்ளியில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து ஆசிரியரைத் தாக்க முயன்ற மாணவர் பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை மாணவர்கள் மிரட்டுவதும், தாக்க முயற்சி செய்வதும் அதிகரித்து வருகின்றது. இச்சம்பவங்களைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.