திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கடந்த ஆண்டு ஆசிட் குடித்த மாணவி ஜெயசுதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், வேலஞ்சேரி பகுதியைச் சேர்ந்த மணிவேல் மகள் ஜெயசுதா (18) 2022-ம் ஆண்டு நீட் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண் பெற்றார். இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி ஜெயசுதா கழிப்பறை சுத்தம் செய்யும் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆறு மாதத்திற்கு முன்பு சென்னை அரசு பொது மருத்துவமனையில் இருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெயசுதா நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.