தான் இறந்துவிட்டதாக நாடகம் ஆடிய பூனம் பாண்டே மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என போலீஸாருக்கு கோரிக்கை வந்தவண்ணம் உள்ளன. அவர் மீது வழக்கு தொடர்ந்தால் 3 முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
2013ம் ஆண்டு வெளியான 'நாஷா' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் பூனம் பாண்டே (32). இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது வழக்கம். இந்த நிலையில் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது சமூக வலைதள மேலாளர் (பிப். 03) பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், “எங்கள் அன்புக்குரிய பூனம் பாண்டேவை கர்ப்பப்பை புற்றுநோயால் இழந்துவிட்டோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்பதிவு பூனம் பாண்டேவின் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. எனினும், இப்பதிவின் உண்மை நிலை குறித்து ரசிகர்கள் சந்தேகம் எழுப்பினர். ஆனால் அவரின் இறப்பை வட இந்திய ஊடகங்கள் உறுதிப்படுத்தி செய்திகள் வெளியிடப்பட்டன. ஊடகங்களிடம் பேசிய பூனம் பாண்டேவின் மேலாளர், 'புற்றுநோய் இருந்தது உண்மைதான். உ.பி.யில் பூனம் பாண்டேவின் சொந்த ஊரில் இறுதிசடங்குகள் நடக்கும்' என்று தெரிவித்தார்.
இந்த நிலையில்தான் நேற்று நடிகை பூனம் பாண்டே, தான் இறக்கவில்லை என்று பகீர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “நான் கருப்பை வாய் புற்றுநோயால் இறந்துவிட்டேன் என்று சொன்னது மிகப்பெரிய தவறுதான். ஆனால், அதன் நோக்கம் என்ன? இந்த செய்தியை கேட்டதும் பலரும் கருப்பை வாய் புற்றுநோய் பற்றி பேசினோம் இல்லையா? இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே என் நோக்கம்' என்று கூறினார்
நடிகை பூனம் பாண்டே தான் இறந்து விட்டதாக பொய் செய்தியை சமூக வலைத்தளத்தில் பரப்பிய நிலையில் அவர் மீது வழக்கு தொடர்ந்தால் அவருக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2000 ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67 படி சமூக வலைதளங்களில் தவறான செய்தியை பரப்பினால் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும், அதேபோல் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது. எனவே பூனம் பாண்டே மீது இந்த பிரிவுகளில் யாராவது வழக்கு தொடர்ந்தால் அவருக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
போலி செய்தியை பரப்பி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பூனம் பாண்டே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது. இல்லையெனில் பலரும் இதனை தவறான முன்னுதாரணமாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர்.