நீராவி முருகன் என்கவுன்ட்டர் திட்டமிட்டு நடத்தப்பட்டது!

மக்கள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு
களக்காடு அருகே என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி நீராவி முருகன்.
களக்காடு அருகே என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி நீராவி முருகன்.

களக்காடு வனப்பகுதியில் ரவுடி நீராவி முருகனை காவல்துறை உயர் அதிகாரிகள் திட்டமிட்டு படுகொலை செய்துள்ளதாக மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகேயுள்ள நீராவிமேட்டை சேர்ந்தவர் நீராவி முருகன் (45). பிரபல ரவுடியான இவர் மீது சென்னை, தூத்துக்குடி, ஈரோடு, திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஆள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டம், பழனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீராவி முருகன் மற்றும் அவரது கும்பலைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்டம், களக்காடு வனப்பகுதியில் நீராவி முருகன் காவல்துறையினரால் இன்று என்கவுன்ட்டர் செய்து கொல்லப்பட்டார். காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் கீழ் இப்படுகொலை நடைபெற்றதாக மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

ஹென்றி டிபேன்
ஹென்றி டிபேன்

இதுகுறித்து அவர் கூறுகையில், "சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, 'தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார். ஆனால், என்கவுன்ட்டர் நடத்திதான் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் பேசவில்லை. ஆனாலும், ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, தூத்துக்குடி, நெல்லை ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட என்கவுன்ட்டர்களில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "நீராவி முருகன் மீது 60 வழக்குகள் இருப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர். பிறகெதற்கு அவரைப் பிடிக்க எஸ்ஐ இசக்கிராஜனை அனுப்பினார்கள்? இந்த எஸ்ஐ மீது தூத்துக்குடியில் பல்வேறு அத்துமீறல் புகார்கள் உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு படையினர் சென்றிருந்தால், ஒரே தோட்டா மூலம் நீராவி முருகனின் காலுக்குக் கீழ் சுட்டிருக்க முடியும். அவரை உயிரோடு பிடித்திருக்க முடியும். ஆனால், நீராவி முருகனை கொல்ல வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட என்கவுன்ட்டர் இது. எனவே, நீராவி முருகனை என்கவுன்ட்டர் செய்த காக்கிச்சட்டை போட்ட குற்றவாளிகள் மீது தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in