யூடியூபில் ஆட்டு வியாபாரம்... சீட்டிங் பார்ட்டியிடம் சீக்கிரமே ஏமாந்த வியாபாரி!

ஆடுகள்
ஆடுகள்

யூடியூப் மூலம் ஆடு விற்பனை செய்த தூத்துக்குடியை சேர்ந்த வியாபாரி ஒருவரை, வேலூரை சேர்ந்த முன் பின் தெரியாத நபர் ஒருவர் ஆடுகளை வாங்குவது போல் நடித்து நம்ப வைத்து ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். ஆடு வியாபாரியான இவர் ஆடுகளை வீடியோ எடுத்து அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்து விற்பனை செய்து வருவதுடன் ஆடு தேவைப்படுவோர் தன்னை அழைக்கலாம் எனக் கூறி அலைபேசி எண்ணையும் பகிர்ந்து விளம்பரம் செய்திருக்கிறார்.

இதனை பார்த்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பெருமாளை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி தனக்கு 36 ஆடுகள் உடனடியாக தேவைப்படுவதாகவும் ஆடுகளை வேனில் ஏற்றிக் கொண்டு வந்தால் கையோடு காசை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.  

அதை நம்பி ஆடுகளை ஏற்றிக்கொண்டு பெருமாள் வேலூர் சென்றுள்ளார். பாகாயம் அருகே வேனுடன் தயாராக நின்று கொண்டிருந்த மோசடி பேர்வழி, பெருமாள் கொண்டு சென்ற ஆடுகளை வேகவேகமாக தனது வேனுக்கு மாற்றியிருக்கிறார். ஆம்பூருக்கு ஆடுகளை கொண்டு சென்று விட்டுவிட்டு பணம் எடுத்து வருவதாக தெரிவித்திருக்கிறார். அவர் வந்துவிடுவார் என்ற  நம்பிக்கையில் முன் பின் தெரியாத ஊரில் நடுரோட்டில் நின்றிருக்கிறார் பெருமாள். 

சிறிது நேரம் கழித்து அந்த நபருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். அந்த நபரின் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது.  அப்போது தான் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெருமாள் பதறியடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.  பாகாயம்  காவல்துறையினர் நடத்திய துரித தேடுதல் வேட்டையில் குடியாத்தம் அருகே ஆடுகளுடன் வேன் நிற்பது கண்டறியப்பட்டு ஆடுகள் மீட்கப்பட்டது. 

அதை மீட்டு பெருமாளிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.  காவல்துறையினருக்கு பெரிய கும்பிடு  போட்டுவிட்டு ஆடுகளுடன் வந்த வேனிலேயே மீண்டும் ஊர் திரும்பிவிட்டார் பெருமாள். முன் பின் தெரியாத நபரின் அழைப்பை ஏற்று  சென்று கடைசியில் வேன் வாடகையாக கைகாசை இழந்தது தான் மிச்சம் என்று புலம்பும் பெருமாள் இனி யூடியூப் பக்கமே போக மாட்டேன் என்று சபதம் செய்திருக்கிறாராம். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in