சட்டம், ஒழுங்கு குறித்து ஸ்டாலின் கறாராக பேசியது ஏன்?

பரபரப்பு பின்னணி
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

சென்னையில் ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று துவங்கி வைத்து பேசினார். அப்போது அவர், ``சட்டம் ஒழுங்கு விஷயத்தில் நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். பொதுமக்களைப் பாதிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஒடுக்குவதில் காவல்துறை பாரபட்சம் காண்பிக்கக்கூடாது'' என்று பேசினார்.

இவ்வளவு சீரியஸாக ஸ்டாலின் பேசியதற்கு காரணம் இல்லாமல் இல்லை என்று அதிமுகவினர் கூறுகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ``தமிழகத்தில் நடக்கும் ஆட்சியின் சட்டம் ‘ஒழுங்கு’ சரியில்லை என்ற மனு அதிமுக சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதியன்று தமிழக கவர்னர் ரவியிடம் வழங்கப்பட்டது. அந்த மனுவிற்கு பதில் கொடுப்பது போலத்தான் முதல்வர் ஸ்டாலினின் நேற்றைய பேச்சு அமைந்திருந்தது. அதிமுகவைவிட கவர்னரைப் பற்றிய அச்சம் எப்போதும் திமுகவிற்கு உண்டு.

அதிமுக அளித்த மனுவில், 200 நாட்களில் 557 கொலைகள் தமிழகத்தில் நடந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செலவம் மட்டுமின்றி பாஜக தலைவர்களும் பேசி வருகின்றனர். அந்த நிலையில் தான் தமிழகமும் இருக்கிறது'' என்று கூறியிருந்தனர். ஆனால், தமிழகத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு காரணமே திமுக தான் என மக்கள் நீதி மய்யம் கட்சி குற்றம்சாட்டுகிறது.

முரளி அப்பாஸ்
முரளி அப்பாஸ்

இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறுகையில், ``திமுக ஆட்சியில் பாலியல் வன்முறை, வழிப்பறி, கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. இவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்ற கவலையில் முதல்வர் நேற்று பேசியிருந்தால் வரவேற்கலாம். ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு சவால் விடக்கூடியவர்கள் திமுகவில் தான் அதிகம் பேர் உள்ளனர். இதனால்தான், திமுக ஆட்சிக்கு வந்தாலே ரவுடித்தனம் அதிகரித்து விடும் என்ற பொதுப்பார்வை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. உட்கட்சி தேர்தலாகட்டும், உள்ளாட்சி தேர்தலாகட்டும் அதில் சட்டம் ஒழுங்கிற்கு பங்கம் விளைவிப்பது திமுகவினர் தானே? பதவி என்று வரும் போது கூட்டணி கட்சியினரை மதிக்காத திமுகவினர், பிறகெப்படி சட்டம் ஒழுங்கை மதிப்பார்கள்?'' என்று கேள்வி எழுப்பினார்.

க.பொன்னுத்தாய்
க.பொன்னுத்தாய்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எந்த அளவு உள்ளது என்று அனைத்திந்திய மாதர் சங்க மாநில செயலாளர் க.பொன்னுத்தாயிடம் கேட்டோம். ``தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக நான் சொல்லவில்லை. ஆளுங்கட்சியைச் சேர்ந்த சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். பாலியல் தொடர்பான புகார்கள் கடந்த பத்து ஆண்டுகளைவிட தற்போது தான் அதிகமாக வருகிறது என்ற அவர் சொன்னது போல, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. ஆனால், இவ்வழக்குகளில் காவல்துறையின் நடவடிக்கை துரிதமாக இல்லை. பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் குழந்தை, திருமணமாகி அவள் ஒரு குழந்தையைப் பெறும் வரை வழக்கு இழுத்தடிக்கப்படுகிறது. இந்த நிலை தான் பாலியல் வழக்குகளில் காவல்துறையின் நடவடிக்கை இருக்கிறது'' என்று கூறினார்.

முதல்வர் ஸ்டாலினின் நேற்றைய பேச்சு பல்வேறு தரப்பில் எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in