ஆடிக்கிருத்திகை திருவிழா : நடனமாடுவதில் தகராறு... 3 பேருக்கு கத்திக்குத்து!

கத்திக்குத்து
கத்திக்குத்து

ஆடிகிருத்திகை திருவிழாவில் சுவாமி ஊர்வலத்தில் நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில், இளைஞர் ஒருவர் 3 பேரை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வேலூர் வாணியர் தெருவில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நேற்று இரவு சாமி வீதி உலா நடந்தது. சாமி ஊர்வலத்தில் இளைஞர்கள் சிலர் நடனமாடினார்கள். அப்போது தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்(23) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாணி தெருவை சேர்ந்த ராஜேஷ்(20), அரவிந்தன்(21), கார்த்திகேயன்(29) ஆகியோர் சிவக்குமாரை தட்டிக் கேட்டுள்ளனர்.  இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜேஷ், அரவிந்தன், கார்த்திகேயன் ஆகியேரை வெட்டி உள்ளார். இதில் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.  இவர்களின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு ஒன்று கூடியதால், சிவக்குமார் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.

உடனடியாக மூன்று பேரையும் மீட்ட அப்பகுதி மக்கள் வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக விரைந்து சென்ற வேலூர் வடக்கு காவல்துறையினர் மூன்று பேரை கத்தியால் வெட்டிவிட்டு தோட்டப்பாளையத்தில் பதுங்கி இருந்த சிவக்குமாரை கைது செய்தனர். சாமி ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறில் மூன்று பேருக்கு கத்திகுத்து விழுந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in