ஆன்லைன் லாட்டரி விற்பனை: தென்மண்டல ஐஜி தனிப்படை அதிரடி

ஆன்லைன் லாட்டரி விற்பனை: தென்மண்டல ஐஜி தனிப்படை அதிரடி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 5 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நத்தம் பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கிற்கு தகவல் கிடைத்தது. இதன்படி ஐஜி தனிப்படை எஸ்ஐ அழகு பாண்டி தலைமையிலான போலீசார் நத்தம் மார்க்கெட் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் சிக்கினர். ராஜேஷ், கூவன், தனசேகர் ஆகிய 3 பேரையும் வளைத்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.18 ஆயிரம் ரொக்கம், 3 செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கொட்டாம்பட்டி ரோடு அம்மன்குளம் அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சிலரும் ஐஜி தனிப்படையின் வலையில் சிக்கினர். மணி, ஹரி பிரகாஷ் என இருவரை பிடித்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.4,600 ரொக்கம், 2 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். நத்தம் போலீசில் ஒப்படைக்கப்பட்ட 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து வருகிறது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in