படுக்கை அறையில் ரத்த வாடை... கண்டுபிடித்த சகோதரி!- தந்தையை கொன்ற மகன் தலைமறைவு

கொல்லப்பட்ட  குமரேசன்
கொல்லப்பட்ட குமரேசன்

சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலை தாண்டவமூர்த்தி நகரை சேர்ந்தவர் குமரேசன்(78). இவருக்கு மூன்று மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூன்று மகள்களும் திருமணம் முடிந்து வெவ்வேறு இடங்களில் தனது கணவருடன் வசித்து வருகின்றனர். மகன் குணசேகரன் மட்டும் குடும்பத்துடன் தந்தை வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வருகின்றார்.

சமீபத்தில் மூத்த மகளான காஞ்சனா மாலாவின் (55) கணவர் உடலநலக் குறைவால் உயிரிழந்ததை அடுத்து காஞ்சனா, தனது தந்தை குமரேசனுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 15-ம் தேதி காஞ்சனா மந்தைவெளியில் உள்ள தனது சொந்தவீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று (மே 19) தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தந்தையின் வீட்டு கதவு பூட்டியிருந்ததை பார்த்து தம்பி குணசேகரனிடம் தந்தை எங்கே சென்றார் என கேட்டதற்கு குணசேகரன் தனக்கு தெரியாது என பதிலளித்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் தந்தை குமரேசன் வீட்டிற்கு வராததால் காஞ்சனாவும், குணசேகரனும் பல இடங்களில் தேடியும் தந்தை கிடைக்கவில்லை. உடனே காஞ்சனா தனது உறவினர்களுடன் சேர்ந்து தந்தை அறையை உடைத்து பார்த்தபோது, படுக்கை அறையில் ரத்த வாடை வீசியதுடன், ஆங்காங்கே ரத்தக்கறை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் சந்தேகமடைந்த காஞ்சனா உடனே வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே தம்பி குணசேகரன் திடீரென தலைமறைவானதால் அவர் மீது மேலும் சந்தேகம் வலுத்தது.

காஞ்சனா புகாரின் பேரில் போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, எலெக்ட்ரிக்கல் வேலை செய்து வரும் குணசேகரன் கடந்த 19-ம் தேதி முதல் செல்போனை அணைவிட்டு தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் கடைசியாக பேசிய செல்போன் டவர் லோக்கேஷனை வைத்து விசாரணை நடத்தியபோது, கடந்த 18-ம் தேதி ராணிப்பேட்டை காவேரிபாக்கம் சோளிங்கர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷிடம் பேசியிருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். உடனே போலீஸார் வெங்கடேசனிடம் விசாரித்ததில் குணசேகரன் டைல்ஸ் கடை வைக்க வேண்டும் என்றும் அதற்கு ஒரு இடத்தை காண்பிக்குமாறு கேட்டுள்ளார். பின்னர் குணசேகரன் டாடா ஏஸ் வண்டியில் ஒரு ட்ரம் மற்றும் மண் வெட்டியுடன் அந்த இடத்திற்கு சென்று சுத்தம் செய்ய வேண்டும் என கூறி வெங்கடேஷை அனுப்பி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தனிப்படை போலீஸார் காவேரிபாக்கம் பகுதிக்கு விரைந்துள்ளனர். குணசேகரனை கைது செய்த பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in