வாகன சோதனையில் சிக்கிய இன்ஸ்பெக்டர் மகன்: பையை திறந்துபார்த்த போலீஸ் அதிர்ச்சி

கைது
கைது

நாகர்கோவிலில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சார்பு ஆய்வாளரின் மகன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை முற்றாகத் தடுக்கும்வகையில் போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதுதொடர்பாக பொதுமக்களும் புகார் தெரிவிக்க வசதியாக பிரத்யேக வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகர்கோவில், வடசேரி போலீஸார் அங்குள்ள பெண்கள் கல்லூரி சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

போலீஸார் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். அவர் அப்போது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைச் சொன்னார். இதனைத் தொடர்ந்து போலீஸார் அவரைச் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்த பையில் 100 கிராம் அளவிற்கு கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்து போலீஸார் விசாரித்தனர். இதில் பிடிபட்ட வாலிபர் தூத்துக்குடி மாவட்டம், பிரேம்நகர் பகுதியைச் சேர்ந்த கவுதம்(19) என்பது தெரியவந்தது.

கவுதம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்துவிட்டு, நாகர்கோவிலில் உள்ள உணவகம் ஒன்றில் இப்போது பயிற்சி பெற்று வருவதும் தெரியவந்தது. தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜா என்பவரிடம் இருந்து கஞ்சாவைப் பெற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் விற்பனை செய்ததாக கவுதம் போலீஸாரிடம் தெரிவித்தார். கவுதமின் தந்தை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் சிறப்பு சார் ஆய்வாளராக (எஸ்.எஸ்.ஐ) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in