4 பேரை வெட்டித்தான் கொன்றோம்: பதறவைக்கிறது காமாட்சி நாயுடுவின் யூடியூப் பேட்டி

சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் தெரிவித்த சமூக ஆர்வலர்
4 பேரை வெட்டித்தான் கொன்றோம்: பதறவைக்கிறது காமாட்சி நாயுடுவின் யூடியூப் பேட்டி

குறிஞ்சாக்குளத்தில் நடந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுவித்த நிலையில், நாங்கள்தான் கொலை செய்தோம் என தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த நாயுடு பேரவை தலைவர் காமாட்சிநாயுடுவை கைது செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் மூர்த்தி புகார் கொடுத்துள்ளார்.

சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் மூர்த்தி என்பவர் தமிழ்நாடு நாயுடு பேரவை நிறுவனர் காமட்சி நாயுடு மீது அளித்துள்ள புகார் மனுவில், "1992-ம் ஆண்டு மார்ச் மாதம் தென்காசி மாவட்டம், குறிஞ்சாக்குளம் கிராமத்தில் காந்தாரியம்மன் கோயில் கட்டுவது தொடர்பாக பட்டியலின மக்களுக்கும், நாயக்கர் சமூக மக்களுக்கும், இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது பட்டியலின சமூகத்தை சேர்ந்த சக்கரை, சுப்பையா, அம்பிகாபதி, அன்பு ஆகிய 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து திருவேங்கடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.

இவ்வழக்கில் 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இது குறித்து விசாரணை நடத்திய கூடுதல் அமர்வு நீதிமன்றம் சந்தேகத்தின் பலனை குற்றவாளிகளுக்கு சாதகமாக்கி, அனைவரையும் விடுதலை செய்து வழக்கை முடித்து வைத்து தீர்ப்பளித்தது. இந்நிலையில் கடந்த 18.2.22 அன்று பேசு தமிழா பேசு என்ற யூடியூப் சேனலுக்கு தமிழ்நாடு நாயுடு பேரவை நிறுவனர் காமாட்சிநாயுடு பேட்டியளித்துள்ளார்.

அதில் நெறியாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த காமாட்சி நாயுடு, 4 பேரை வெட்டி கொன்றது உண்மைதான் என கூறி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த பேட்டி யூடியூப்பில் 28 நிமிட 10 நொடிகள் இடம் பெற்றுள்ளது. இந்த பேட்டியை பார்த்து அச்சமும் நடுக்கமும் ஏற்பட்டு மனதளவில் பாதிக்கப்பட்டேன். கொலை வழக்கில் ஒப்புதல் வாக்குமூலம் போல தெளிவாக பேசிய காமாட்சி நாயுடு மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in