
முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசியதாக எச்.ராஜா மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 19ம் தேதி தமிழ்நாட்டில் ஆங்காங்கே விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதில், சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் பாஜக தலைவர்களுள் ஒருவரான எச்.ராஜா கலந்து கொண்டார்.
இந்த ஊர்வலத்தில் அவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து ஒருமையில் பேசியதோடு, அவதூறாகவும் பேசியுள்ளார்.
அதே போல், அந்த ஊர்வலத்தில், இரு மதத்தினர் இடையே மோதலை உருவாக்கும் வகையிலும் எச்.ராஜா பேசியுள்ளார். இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்தது.
இந்நிலையில், காளையார்கோயில் காவல்நிலையத்தில் எச்.ராஜா மீது புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எச்.ராஜா மீது, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாகப் பேசியது, இரு மதத்தினர் இடையே மோதல் போக்கை உருவாக்கும் விதமாகப் பேசியது என மொத்தம் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அண்மையில் முதல்வர் குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்ட தூத்துக்குடி பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார். அதேபோல பெரியார் மற்றும் அம்பேத்கர் குறித்து அவதூறு பேசியதாக ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ் மணியன் கைது செய்யப்பட்டார். அந்த வரிசையில் எச்.ராஜாவும் கைது செய்யப்படுவரா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.