
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி குறித்து இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவிட்ட புகாரில், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக சமூக ஊடக பொறுப்பாளர் பிரவீன் ராஜ் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
பாஜகவினர் பலரும் சமூக வலைதளங்களில் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி குறித்து கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர். இதில் மிக மோசமான முறையில் பதிவிடுபவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் அளிக்கும் புகாரின் பேரில், தமிழக போலீஸார் அடுத்தடுத்து கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்கள் முன்பு பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இதனையடுத்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக சமூக ஊடக பொறுப்பாளர் பிரவீன் ராஜ் சமூக வலைதளத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி குறித்து இழிவான வகையில் விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் புகார் அளித்த நிலையில் இன்று காலை பிரவீன் ராஜை போலீஸார் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெர்வித்துள்ளனர்.