விளையாடிக் கொண்டிருந்த மாணவன் துடிதுடித்து பலி... ஒய்எம்சிஏ மைதானத்தில் விபரீதம்!

விளையாடிக் கொண்டிருந்த மாணவன் துடிதுடித்து பலி... ஒய்எம்சிஏ மைதானத்தில் விபரீதம்!

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் விளையாடச் சென்ற சிறுவன்,  தனியார் நிகழ்ச்சிக்கு எடுக்கப்பட்ட மின் இணைப்பு கேபிள் வழியே மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஒய் எம் சி ஏ மைதானம்
ஒய் எம் சி ஏ மைதானம்

சென்னை மயிலாப்பூர் டிசெல்வா சாலையை சேர்ந்தவர்கள் தயாள் சுந்தரம் - கீதா பிரியா தம்பதியினர். மருத்துவ தம்பதியான இவர்கள் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களது 10 வயது மகன் ரியான் ஆதவ், ஆர்.ஏ.புரத்தில் உள்ள பிரபல பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். 

கூடைப்பந்து விளையாட்டில் அவன் மிகவும் ஆர்வமாக இருந்ததால், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்தப்படும் கூடைப்பந்து விளையாட்டு பயிற்சியில் பெற்றோர் சேர்த்துள்ளனர். ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்து ரியான் ஆதவ் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு சென்று பயிற்சி பெற்று வந்தான். நேற்று முன்தினம் மாலையும் அவ்வாறு பயிற்சிக்கு சென்றான்.

வார இறுதி நாட்களில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தனியார் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி அன்று இசைக்கச்சேரி உட்பட 5 தனியார் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தனியார் நிகழ்ச்சிக்காக பாதுகாப்பற்ற முறையில் மின்சாரம் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. கூடைப்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவன் ரியான் ஆதவ் மீது அங்கிருந்த மின் கேபிளில் கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவன் மயக்கமடைந்தான்.

அதையடுத்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெற்றோர் பணியாற்றும் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

அவனது பெற்றோர் அளித்த புகாரின்பேரில்  சைதாப்பேட்டை போலீஸார் விபத்து நடந்த ஒய்எம்சிஏ மைதானத்தை தனியார் அமைப்புகளுக்கு வாடகைக்கு விடும் பொறுப்பு அதிகாரி ஜான் சுதர்சன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பாதுகாப்பற்ற முறையில் மின்சாரம் கொண்டு சென்ற கேபிளில் மின் கசிவு ஏற்பட்டு மாணவன் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 

விளையாடச் சென்ற சிறுவன் மின்சாரம் பயந்து பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in