தவறான பழக்கத்தில் தம்பி... அடிக்கடி தொந்தரவு: அடித்துக் கொன்ற சகோதரி

தவறான பழக்கத்தில் தம்பி... அடிக்கடி தொந்தரவு: அடித்துக் கொன்ற சகோதரி

சோழவரம் அருகே தம்பியை கொலை செய்த சகோதரி மற்றும் அவரது கணவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள மாவுத்கான்பேட்டையை சேர்ந்தவர் பூபாலன் (37). இவர் தனது சகோதரி தனலட்சுமி (42) வீட்டில் வசித்து வந்தார். திருமணம் ஆகாத பூபாலன், சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் பொழுதை கழித்து வந்துள்ளார். குடி பழக்கத்திற்கு அடிமையான பூபாலன், பணம் கேட்டு தனது சகோதரிக்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். கடந்த 2-ம் தேதி இரவில் போதையில் வீட்டிற்கு வந்த பூபாலன், தனது சகோதரியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு மீண்டும் தொந்தரவு செய்துள்ளார்.

அப்போது, அவர்களுக்குள் கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த தனலட்சுமி, தனது கணவர் ரவியுடன் சேர்ந்து பூபாலனை உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார் பூபாலன். பின்னர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டனர் தனலட்சுமி. நேற்று கணவன்- மனைவி இருவரும் வீட்டிற்கு வந்தனர். அப்போது, பூபாலன் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பூபாலன் மீது இருந்த காயங்களை மறைத்த சகோதரி, அதிகமாக மது குடித்ததால் தம்பி இறந்துவிட்டதாக உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களிடம் கூறியுள்ளார்.

இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கணவன்- மனைவி நடவடிக்கையில் சந்தேகமடைந்த அருகில் வசிப்பவர்கள், இது குறித்து சோழவரம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல் துறையினர், பூபாலனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அப்போது, பூபாலனை அடித்துக் கொன்றதாக தனலட்சுமியும், அவரது கணவர் ரவியும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து, இரண்டு பேரையும் கைது செய்த காவல் துறையினர், புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in