
சீர்காழி அருகே நகராட்சி தொடக்கப் பள்ளி சமையலறை கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் சமையலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மாணவர்கள் உள்ளிட்ட வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டு பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 16 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாணவர்களுக்கு மதிய உணவிற்காக சமையலர் கலா என்பவர் உணவு தயார் செய்யும் பணியை மேற்கொண்டிருந்தார்.
அப்போது தலைமை ஆசிரியை அழைத்ததால் சமையலறையை விட்டு வெளியே வந்தார். சரியாக அப்போது திடீரென சமையலறை கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் சமையலறையில் இருந்த அடுப்பு மற்றும் சமையல் உபகரணங்கள் சேதமடைந்தன. கலா வெளியில் வந்ததால் காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.
பின்னர் அருகில் இருந்த பள்ளியின் சமையல் கூடத்தில் இருந்து இப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு தயார் செய்து கொடுக்கப்பட்டது. 1976ம் ஆண்டு கட்டப்பட்ட இப்பள்ளி கட்டடம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டு அருகில் உள்ள சமுதாய கூடத்தில் பள்ளி இயங்கி வருகிறது.
ஆனால் சமையலறை கூடம் பழைய கட்டிடத்திலேயே செயல்படுகிறது. பல ஆண்டுகளாக சிதிலமடைந்த கட்டிடத்தை புதுப்பித்து தர வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கிராம மக்கள் புகார் தெரிவித்தும் அலட்சியம் காட்டி வந்ததாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். மேலும் இப்பள்ளியில் குடிநீர், கழிவறை, போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாவதாக கூறப்படுகிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக நகராட்சி ஆணையர் ஹேமலதா மற்றும் நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி உள்ளிட்டோர் சமையல் கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கூடியிருந்த பெற்றோர்கள் இதுகுறித்து முறையிட்டனர்.
இதையடுத்து அந்த நகராட்சி தொடக்கப் பள்ளிக்கு சமையலறை, பள்ளிக் கட்டிடம் புதிதாக கட்ட 33 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாகவும் நகராட்சி ஆணையர் ஹேமலதா மற்றும் நகர் மன்றத்தலைவர் தெரிவித்தனர்.