கடனைத் திருப்பித் தராததால் ஆத்திரம்... ஆன்லைன் வர்த்தகரை கடத்தி தாக்குதல்... நண்பர் உட்பட இருவர் கைது!

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

சீர்காழி அருகே வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காத ஆன்லைன் வர்த்தகரை கடத்திய இரண்டு பேரை கைது செய்த போலீஸார், பைனான்சியர் உள்ளிட்ட மூன்று பேரை தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா திருவெண்காடு அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் கவியரசன் (37). ஆன்லைன் வர்த்தகரான இவர் தனது நண்பரான ஸ்டீபன் செல்வகுமார் என்பவர் மூலம் தஞ்சாவூரைச் சேர்ந்த பாலகுமாரன் என்பவரிடம் ரூ 8 லட்சம் பணத்தை வட்டிக்கு கடனாக வாங்கியுள்ளார்.

அதில் ரூ 4 லட்சத்தைத் திருப்பி கொடுத்த கவியரசன், மீதி தொகையைக் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். இந்நிலையில் ஸ்டீபன் செல்வகுமார், கவியரசனை தஞ்சாவூருக்கு அழைத்துள்ளார். தஞ்சாவூருக்கு சென்ற கவியரசனை பைனான்சியர் பாலகுமாரன் உள்ளிட்டோர் கடத்திச் சென்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் கவியரசனின் மனைவி அனுசியா தேவிக்கு போன் செய்து, கணவர் வாங்கிய கடன் தொகையை கொடுத்துவிட்டு மீட்டுச் செல்லுமாறு மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அனுசியா தேவி, திருவெண்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.

கடத்தப்பட்ட கவியரசன்
கடத்தப்பட்ட கவியரசன்

அதில் பைனான்சியர் பாலகுமாரன், அவரது சகோதரர் பாலமுருகன், புகழேந்தி, மணிகண்டன் மற்றும் ஸ்டீபன் செல்வகுமார் ஆகியோர் கடத்தியது தெரியவந்தது. இந்த கும்பல் கவியரசனை புதுக்கோட்டை மாவட்டம் அத்திவெட்டி அய்யனார் கோயில் அருகே அடைத்து வைத்து, அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார் கவியரசனை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய புகழேந்தி மற்றும் ஸ்டீபன் செல்வகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், தலைமறைவான பைனான்சியர் சின்னையா என்ற பாலகுமாரன், பாலமுருகன், மணிகண்டன் ஆகியோரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in