சென்னையில் பகலில் டீ மாஸ்டர் வேலை; இரவில் வீடு புகுந்து பெண்களிடம் அத்துமீறல்: மதுரை வாலிபர் சிக்கியது எப்படி?

கைதான ராஜேஷ்கண்ணன்
கைதான ராஜேஷ்கண்ணன்

சென்னையில் வீட்டில் தனியே இருக்கும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதுடன், நகை மற்றும் பணம் பறிப்பிலும் ஈடுபட்ட மதுரை வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை பாரிமுனை பகுதியில் வசித்து வரும் 40 வயதுடைய வடமாநில பெண் ஒருவர் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கடந்த மாதம் 30-ம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்தபோது, ஒரு வாலிபர் திடீரென வீட்டில் புகுந்து ஆபாசமாகப் பேசி கட்டியிருந்த புடவையைப் பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்றும், தான் கூச்சலிட்டதால் அந்த வாலிபர் தப்பியோடி விட்டதாகவும் அந்தப் புகாரில் தெரிவித்திருந்தார்.

பின்னர் பூக்கடை போலீஸார் சம்பவ இடத்துக்கு உட்பட்ட தெருக்கள், வீடுகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பழைய குற்றவாளியான ராஜேஷ் கண்ணன்(26) என்பவர், பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்தது தெரியவந்தது.பின்னர் வால்டாக்ஸ் சாலையில் பதுங்கி இருந்த ராஜேஷ் கண்ணனை போலீஸார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் 4 வருடங்களுக்கு முன்பு பிழைப்பு தேடி சென்னைக்கு வந்து கொடுங்கையூரில் தங்கி அங்குள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக பணியாற்றி வந்தார். பெண்கள் மீது மோகம் கொண்ட ராஜேஷ் கண்ணன், இரவு நேரத்தில் கஞ்சா மற்றும் மது அருந்திவிட்டு அந்தப் பகுதியில் தனியாக வசிக்கும் பெண்களின் வீட்டை நோட்டமிட்டு மறுநாளே வீடு புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

மேலும் அவர்களிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தைப் பறித்து செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இதேபோல் கொடுங்கையூர், பால்பண்ணை, திருவிக நகர் மற்றும் கோவை மாநகரம் உள்ளிட்ட ஒன்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் டீ மாஸ்டராக பணியாற்றிய ராஜேஷ் கண்ணன், அந்தப் பகுதியில் தனியாக வசிக்கும் பெண்களின் வீட்டை நோட்டமிட்டு நுழைந்து, பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதும், திருவிக நகரில் இதுபோன்ற வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்குச் சென்று சமீபத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது.

தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போடுவதற்காக ராஜேஷ் கண்ணன் பூக்கடையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது வழக்கம் போல் அந்தப் பகுதியில் உள்ள வீட்டை நோட்டமிட்டு வடமாநில பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

கைதான ராஜேஷ் கண்ணன் மீது திருவிக நகர், மாதவரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் ஒன்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in