காதலன் கண் முன்னே பெண்ணிடம் அத்துமீறல்; காலை உடைத்த போலீஸ்?

காதலன் கண் முன்னே பெண்ணிடம் அத்துமீறல்; 
காலை உடைத்த போலீஸ்?

கமுதி அருகே காதலன் கண்முன் பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைதுக்கு முன்பாக போலீசுக்குப் பயந்து தப்பியோடி தவறிவிழுந்ததால் அந்த இருவரும் கால்கள் முறிந்து இப்போது மருத்துவமனையில் படுத்திருப்பது கூடுதல் செய்தி

அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் காதலித்தார். காதலர்கள் இருவரும் கடந்த 23-ம் தேதியன்று பீச்சுக்கு செல்ல முடிவெடுத்து, ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடிக்குப் பேருந்தில் வந்தனர். பின்னர் அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் மூக்கையூர் துறைமுகக் கடற்கரைக்குச் சென்றுள்ளனர்.

காதலர்கள் இருவர் ஆளில்லாத கடற்கரைப் பகுதிக்குத் தனியே செல்வதை கவனித்த 3 பேர் கொண்ட கும்பல், ஹரிகிருஷ்ணனை தாக்கி அந்த இளம்பெண்ணை கூட்டுப் பலத்காரம் செய்திருக்கிறது. காதலன் கண் எதிரிலேயே இந்தக் கொடூரம் நிகழ்ந்தது. இத்தனை கொடுமைக்குப் பிறகும், அந்தப் பெண் அணிந்திருந்த நகையையும் பறித்துச்சென்றது அந்தக் கும்பல்.

தனது கண் எதிரிலேயே காதலிக்கு நிகழ்ந்த கொடூரத்தால் கடுமையான மனபாதிப்புக்கு ஆளான ஹரிகிருஷ்ணன், நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இனியும் அமைதிகாக்கக்கூடாது என்று நடந்த சம்பவம் தொடர்பாக அந்த இளம்பெண் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் புகார் அளித்தார்.

சம்பவம் நடந்தது ராமநாதபுரம் மாவட்டம் என்பதால் உடனடியாக ராமநாதபுரம் எஸ்பியிடம் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் பற்றி தீவிர விசாரணையைத் தொடங்கினர் போலீஸார். அந்தப் பெண்ணுக்கு நடந்த கொடுமைகள் குறித்து சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா விரிவான அறிக்கை கொடுத்ததைத் தொடர்ந்து அந்த குற்றவாளிகளை உடனே பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

விசாரணையில், கமுதி அருகே வேப்பங்குளத்தைச் சேர்ந்த பத்மாஸ்வரன் (94), விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நத்தகுளத்தை சேர்ந்த தினேஷ்குமார், பசும்பொன் கிராமத்தைச் சேர்ந்த அஜீத் ஆகியோர் இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களது செல்போன் எண்களை கொண்டு இருப்பிடத்தை நோட்டமிட்ட போலீஸார், பத்மாஸ்வரன், தினேஷ்குமார் இருவரும் கமுதி அருகே குண்டுகுளம் கிராமத்தில் இருப்பதைக் கண்டுபிடித்தனர். உடனே அங்கு சென்ற தனிப்படை போலீஸார் அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

அவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டபோது, மருத்துவமனையில் கால் உடைந்த நிலையில் சிகிச்சையில் இருந்தார்கள். கைது முயற்சியின் போது போலீஸாரை அரிவாளால் வெட்டிவிட்டு அவர்கள் தப்பியோட முயன்றதாகவும், அப்போது பைக் சறுக்கி கீழே விழுந்து இவருக்கும் கால் முறிவு ஏற்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், “தொடர் வழிப்பறியில் ஈடுபடுபவர்களின் கையை உடைப்பதும், பெண்கள் விவகாரத்தில் தொடர்ந்து குற்றமிழைப்பவர்களின் காலை உடைப்பதும் குற்றப்பிரிவு போலீஸாரின் வழக்கம். இனி கொஞ்ச காலத்துக்கு அவர்கள் வீட்டைவிட்டு எங்கும் நகரமுடியாது” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். ஒருசிலர் இதை போலீஸ் அத்துமீறல் என விமர்சித்தாலும் பெரும்பாலானவர்கள், “இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுபவர்களை இப்படி தண்டித்தால் தான் அடுத்தமுறை இப்படி செய்ய நினைக்க மாட்ட்டார்கள்” என்று போலீஸ் தரப்பை நியாயப்படுத்தவும் செய்கிறார்கள்.

இந்த வழக்கில் தொடர்புடைய இன்னொரு குற்றவாளியான பசும்பொன் அஜித் திருப்பூருக்குத் தப்பிச்சென்றுவிட்டார். ஆனால், அங்கே மற்றொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், விரைவில் அவர் கமுதிக்கு அழைத்துவரப்பட்டு முறைப்படி விசாரிக்கப்படுவார் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in