
கன்னட சினிமாவின் முக்கிய நபராக வலம் வரும் நடிகர் வீரேந்தர் பாபு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கன்னடத் திரையிலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு 'சுயம்கிருஷி' படத்தின் மூலம் கன்னட திரையுலகில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அவர் அறிமுகமானார். இவர் கடந்த 2021ம் ஆண்டு பெண் ஒருவரை மயக்கமடைய செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனை வீடியோவாக பதிவு செய்து அவர் அந்தப் பெண்ணை மிரட்டத் தொடங்கியுள்ளார். குறிப்பாக ரூ.15 லட்சம் பணம் தரவில்லை என்றால் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்வதாக தெரிவித்துள்ளார். இதனால் பயந்துபோன அந்த பெண் தனது நகைகளை விற்று பணம் கொடுத்துள்ளார்.
இதனிடையே கடந்த ஜூலை 30ம் தேதி மீண்டும் வீரேந்திர பாபு அந்த பெண்ணை தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார். அந்த பெண்ணை காரில் ஏற்றிச் சென்று அவரிடம் இருந்த தங்க ஆபரணங்களை பெற்றுள்ளார். மேலும் துப்பாக்கியை காட்டியும் வீரேந்திர பாபு மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் கொடிகேஹள்ளி காவல்துறையில் புகாரளித்தார். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து வீரேந்திர பாபு மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர்.
வீரேந்திர பாபு இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல. முன்னதாக ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குவதாகக் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து உதவியின்றி ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் வீரேந்திர பாபு, மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வாங்க உதவி கேட்டு ரூ.1.8 கோடி பெற்றதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.