வேலியே பயிரை மேய்ந்தது: சிறுமிக்கு 10 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை

தாய், அத்தை உள்பட 6 பேர் கைது: மாமாவுக்கு போலீஸ் வலை
வேலியே பயிரை மேய்ந்தது: சிறுமிக்கு 10 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை

சென்னையில் கடந்த 10 ஆண்டுகளாக 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவினர் மற்றும் தாய் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

சென்னை காசிமேட்டை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் 2000-ம் ஆண்டு தனது கணவர் இறந்து பின்னர் தன் 13 வயது மகளை அதே பகுதியில் வசித்து வந்த தனது தம்பி தேசப்பனிடம் ஒப்படைத்துள்ளார். தேசப்பனும் சிறுமியை தான் பிள்ளைபோல் வளர்ப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பி சிறுமியின் தாய் வேறு ஒருவரை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வந்தார். தேசப்பனுக்கு திருமணமாகி உஷா என்ற மனைவி உள்ளார். திருமணமாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.

இந்நிலையில் சிறுமி வீட்டிற்கு வந்த நாள் முதல் அதாவது, கடந்த 10 ஆண்டுகளாக தேசப்பன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதற்கு அவரது மனைவி உஷாவும் உடந்தையாக இருந்து வந்தார். இவர்களது கொடுமை தாங்காமல் சிறுமி வீட்டைவிட்டு வெளியேறி பிராட்வேயில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் தங்கி படித்துவந்தார். பின் சிறுமி காப்பகத்தில் இருப்பதை அறிந்த தேசப்பன், அவரது மனைவி உஷாவுடன் நேரில் சென்று, காப்பகத்தினரிடம் தங்களுக்கு குழந்தை இல்லை என்றும் அக்கா மகளை நன்றாக வளர்ப்பதாக கூறி நாடகமாடி சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

ஆனால் காப்பகத்தில் இருந்த சிலரிடம் சிறுமி தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை எடுத்து கூறியும் காப்பாக்கத்தில் இருந்த சிலர் அதை பொருட்படுத்தாமல் சிறுமியை தேசப்பனிடம் ஒப்படைத்தனர். காப்பகத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்ற சிறுமியை தேசப்பன் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி கர்ப்பம் அடைந்ததாகவும், பின்னர் தேசப்பன் சிறுமியின் கருவை கலைத்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் தேசப்பனின் நண்பர்களான சிவா, சீனிவாசன், ரமேஷ் ஆகியோரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். அத்தை ரேவதியும் சிறுமியின் உடலில் மிளகாய் பொடி தூவி சித்ரவதை செய்து வந்துள்ளார். தன் தாயிடம் சிறுமி இதுகுறித்து தெரிவித்தபோது அவரும் கண்டும், காணாமலும் இருந்துள்ளார். குடும்பத்தினரின் கொடுமை தாங்க முடியாமல், கடந்த 2020-ல் சிறுமி வீட்டைவிட்டு வெளியேறி பிராட்வேயில் சுற்றித்திரிந்து உள்ளார். சிறுமி அனாதையாக சுற்றித்திரிவதை பார்த்த பொதுமக்கள் உடனே 1098-ல் தகவல் தெரிவித்தனர். பின் சம்பவ இடத்திற்கு வந்த குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் சிறுமியை மீட்டு, பெரவள்ளூர் உள்ள முகாமில் தங்கவைத்துள்ளனர்.

இது தொடர்பாக, குழந்தைகள் நல அமைப்பின் நிர்வாகி லலிதா ராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி உறவினர் உஷா, ரேவதி, சிறுமியின் தாய் மற்றும் காப்பக நிர்வாகி இசபெல், சுகந்தி, பிரசன்னா, அலெக்சாண்டர் உட்பட 6 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள தேசப்பன், சிவா, சீனிவாசன், ரமேஷ், பாத்திமா ஜாஸ்மீன் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது 26 வயதாகிறது. 10 ஆண்டுகளாக சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.