
திருச்சி லால்குடி அருகே உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் ஒருவரை அக்கல்லூரி மாணவர்கள் அடித்து உதைத்து போலீஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள குமுளூரில் அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. மாணவ, மாணவிகள் இணைந்து பயின்று வரும் இந்த கல்லூரியில் கவுரவ பேராசிரியராக ஒருவர் பணியாற்றி வருகிறார்.
அவர், தன்னிடம் பயிலும் மாணவிகள் சிலருக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அவரின் இந்த நடவடிக்கை அங்கு பயிலும் மாணவர்களுக்கு தெரிய வந்தது. இந்த நிலையில், இன்று காலை கல்லூரிக்கு வந்த அந்த கவுரவ பேராசிரியரை கல்லூரி வளாகத்தில் வைத்து மாணவர்கள் அடித்து உதைத்தனர்.
மேலும் மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட கவுரவ பேராசிரியரை கைது செய்ய கோரியும் மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார், மாணவர்களிடம் இருந்து அந்தப் பேராசிரியரை மீட்டனர். இதனைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்தனர். இதன் பின் மாணவர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.