பாட்னா அருகே ’ஓயோ’ கூட்டணியில் ஹோட்டலில் ஒன்றில் களைகட்டிய செக்ஸ் ராக்கெட் விவகாரம் வெளிப்பட்டதை அடுத்து, ஆண்கள், பெண்கள் என தலா பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹோட்டல் அறைகளில் பாலியல் தேவைக்காக அறையெடுப்போர் மத்தியில், ஹோட்டல் நிர்வாகமே ஆன்லைன் அனுசரணையில் திட்டமிட்டு பாலியல் தொழிலை நடத்தி வந்தது அம்பலப்பட்டிருக்கிறது. பீகார் தலைநகர் பாட்னா அருகே பிஹாட்டாவில் செயல்படும் ஹோட்டல் ஒன்று குறித்து பாட்னா போலீஸாருக்கு தகவல் வந்தது. புறநகர்ப் பகுதியில் கிராமம் ஒன்றினை ஒட்டி அமைந்திருக்கும் ’தி பிரின்ஸ் இன்’ என்ற ஹோட்டலில் மர்ம நபர்கள் குழுவாக நடமாடுவது குறித்து கிராமத்தினர் மத்தியில் சந்தேகம் பரவியதை அடுத்து அவர்கள் காவல்துறைக்கு தகவல் தந்தனர்.
மாறுவேடத்தில் ஹோட்டலுக்கு சென்ற போலீஸாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஓயோ ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று ஹோட்டல் நிர்வாகத்தினர் திருப்பி அனுப்பினார்கள். அப்படியான முன்பதிவும் ஹோட்டல் நிர்வாகத்துடன் தொடர்புடைய சில நபர்கள் மூலம் மட்டுமே செய்ய இயலும் என்றார்கள். இதனையடுத்து சில தினங்கள் மறைந்திருந்து கண்காணித்த போலீஸார், ஹோட்டலில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதை உறுதி செய்தனர்.
பின்னர் அதிரடியாக ரெய்டு நடவடிக்கையில் போலீஸார் குதித்தனர். அப்போது ஹோட்டல் அறைகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் கூட்டமாக ஏடாகூட நிலையில் சிக்கினர். இது தவிர்த்து தடை செய்யப்பட்ட சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்த போலீஸார், அவை குறித்த தகவல்களை வெளியிடவில்லை.
ஓயோ வாயிலாக சங்கேத குறியீடுகளுடன் ஆன்லைனில் முன்பதிவு செய்வது, தேவை மற்றும் சேவைக்கு ஏற்ப கட்டண நிர்ணயம், வெளிநாடுகள் பாணியில் கட்டற்ற பாலியல் ஈடுபாடு என ஹோட்டல் நிர்வாகமே செக்ஸ் ராக்கெட்டில் ஈடுபட்டிருக்கிறது. போலீஸ் ரெய்டு நடவடிக்கையின்போது, பத்துக்கும் மேற்பட்ட தலா ஆண் மற்றும் பெண்களை போலீஸார் கைது செய்தனர். இந்த பாலியல் முறைகேட்டின் இதர கண்ணிகள் மற்றும் பின்னணி குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.