
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசுப் பேருந்தும், டாடா சுமோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரு டாட்டா சுமோ காரில் திருவண்ணாமலையில் இருந்து இளைஞர்கள் சுமார் பத்து பேர் புறப்பட்டு பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பெங்களூருவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து ஒன்று செங்கம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
நேற்று நள்ளிரவில் செங்கம் அருகே பக்கிரிபாளையம் புறவழிச்சாலையில் அந்தனூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது அரசுப் பேருந்தும், டாடா சுமோ காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டாட்டா சுமோ கார் முற்றிலுமாக உருக்குலைந்து, அதில் பயணித்த 7 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
மேலும் காரில் பயணம் செய்த நபர்கள் மற்றும் எதிரே பேருந்தில் பயணித்தவர்கள் என மொத்தம் 14 பேர் செங்கம் மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து மேல்செங்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் செங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.