
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை கொச்சி விமான நிலையத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளது. இது தொடர்பாக அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவரது நீதிமன்ற காவல் இம்மாதம் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை ஏற்கனவே பல முறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனாலும் அசோக்குமார் அமலாக்கத்துறையினர் முன் ஆஜராகவில்லை. இந்நிலையில் கரூர் புறவழிச்சாலையில் அசோக்குமார் கட்டி வரும் புதிய பங்களாவில் அமலாக்கத்துறையினர் கடந்த வாரம் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையினை தொடர்ந்து அசோக்குமாரின் மனைவிக்கும் அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பினர். மேலும் இந்த பங்களாவை முடக்கியும் உத்தரவு பிறப்பித்தனர். இந்நிலையில் அசோக்குமார் இன்று அதிகாலை கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமலாக்கத்துறை சம்மன் அளித்த நிலையில், அவர் ஆஜர் ஆகாமல் வெளிநாட்டிற்கு தப்பிவிடும் வாய்ப்பு இருந்ததால், நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு அசோக்குமார் குறித்து லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், கொச்சி விமான நிலையத்தில் வைத்து அசோக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். இதை தொடர்ந்து கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வரும் பணிகளில் அமலாக்கத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.