மனைவியின் சேலையை திருடியதாக, பக்கத்து வீட்டுக்காரரை சுட்டுக் கொன்ற கணவர்!

மனைவியின் சேலையை திருடியதாக தகராறு
மனைவியின் சேலையை திருடியதாக தகராறு

மனைவியின் சேலையை திருடியதாக பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற செக்யூரிட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே நதுப்பூர் கிராமத்தில் இந்த குற்ற சம்பவம் நடந்திருக்கிறது. குருகிராமில் தனியார் செக்யூட்டிகளாக பணியாற்றும் பலர் நதுப்பூர் கிராமத்தில் ஒன்றாக தங்கியுள்ளனர். அவர்களில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த அஜய் குமாரும் ஒருவர்.

நேற்று முன் தினம் அஜய் குமாரின் மனைவி ரீனா, பக்கத்து குடியிருப்பில் வசிக்கும் பிந்து குமார் என்பவர் குறித்து தெரிவித்த தகவலால் அஜய் குமார் கொதிக்க ஆரம்பித்தார். அதன் அடிப்படையில் மனைவி ரீனாவின் சேலைகளை பிந்து குமார் திருடுவதாக இதர செக்யூரிட்டிகளிடம் குறைபட்ட அஜய் குமார், பணி முடிந்து திரும்பும் பிந்து குமாருக்காக வன்மத்துடன் காத்திருந்தார்.

அதன்படி மாலை 7 மணியளவில் பிந்து குமார் திரும்பியதுமே அவர் மீது பாய்ந்தார் அஜய் குமார். மனைவியின் சேலையை திருடியதான குற்றச்சாட்டை பிந்து குமார் முற்றாக மறுத்தார். இதனால் வாக்குவாதம் வலுத்ததில் தன் வசமிருந்த டபுள் பேரல் துப்பாக்கியை எடுத்த அஜய் குமார், கண்ணிமைக்கும் நேரத்தில் பிந்து குமாரை சுட்டார்.

வயிற்றில் குண்டு பாய்ந்த பிந்து குமார் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், அஜய் குமாரை கைது செய்து அவர் வசமிருந்த உரிமம் பெற்ற டபுள் பேரல் துப்பாக்கியை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in