8-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: தம்பிக்கு உதவிய அண்ணன் சிக்கினார்!

8-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: தம்பிக்கு உதவிய அண்ணன் சிக்கினார்!

ஈரோட்டில் 8-ம் வகுப்பு மாணவியை தனது தம்பிக்கு திருமணம் செய்து வைத்த அண்ணனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. சலூன் கடை வைத்துள்ள இவர் அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியோடு பழகியுள்ளார். அவருக்கு ஆசை வார்த்தை கூறி டூவீலரில் கடந்த 3-ம் தேதி கடத்திச் சென்றுள்ளார். கொளப்பலூரில் உள்ள கோயிலில் அந்த மாணவியை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், தங்கள் மகளைக் காணவில்லை என மாணவியின் பெற்றோர் காஞ்சிக்கோவில் போலீஸில் புகார் அளித்தனர். இதன் பேரில் மாணவியை போலீஸார் தேடி வந்தனர். கடந்த 5-ம் தேதி பெத்தாம்பாளையம் நால்ரோடு அருகே வாகனத் தணிக்கையின் போது சிறுமியோடு வந்த கார்த்தி, காஞ்சிக்கோவில் மேற்கு ரத வீதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாணவியை கார்த்தி கடத்திச்சென்று திருமணம் செய்ததற்கு கோபாலகிருஷ்ணனும் உடந்தையாக இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இருவர் மீதும் குழந்தைத் திருமணம் தடை சட்டம், கடத்தல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து மாணவி அளித்த வாக்குமூலத்தில், திருமணத்திற்கு கார்த்தியின் அண்ணன் முரளியும் உடந்தையாக இருந்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து தலைமறைவாக இருந்த முரளியை காஞ்சிக்கோவில் போலீஸார் கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in